தெலங்கானா மாநிலத்தில் ரயில் மோதி பள்ளிப் பேருந்து விபத்துள்ளானதற்கு பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து மக்களவையில் ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா விளக்கமளித்தார்.
அப்போது அவர், “விபத்துக்கு காரணம் பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே. விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்” என்றார்.
முன்னதாக இன்று காலை மக்களவையில் பேசியபோது, தெலங்கானா சம்பவம் மிகவும் துயரமான சம்பவம் என கவுடா கூறியிருந்தார்.
செல்போன் பேச்சே விபத்துக்கு காரணம்
இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்து ஓட்டுநர் சம்பவம் நடைபெற்ற போது செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்தவுடனேயே, அங்கு விரைந்த தெற்கு மத்திய ரயில்வே பொது மேலாளர் பி.கே.ஸ்ரீவஸ்தவா கூறுகையில்: விபத்துக்குள்ளான பேருந்து தினமும் வேறு ஒரு பாதையில்தான் சென்றிருக்கிறது. இன்றைக்கு பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் ஓட்டுநர் பேருந்தை இந்த வழியாக இயக்கியுள்ளார்.
இது ஆளில்லாத லெவல் கிராசிங் என்றாலும் தேசிய நெடுஞ்சாலையை (என்.எச்.44-ஐ) ஒட்டி அமைந்துள்ளதால் ரயில் தூரத்தில் வந்தால் கூட பேருந்து ஓட்டுநர் அதனை கவனிக்கலாம். அதேபோல் ரயிலை இயக்குபவரும், பேருந்தை கவனிக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு சில நிமிடங்கள் காத்திருப்பதால் ஒன்றும் குறைந்தவிடாது. ஆனால் ஓட்டுநர் அலட்சியம் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.