சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது

சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது

beggarசவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப் பற்றி விசாரிக்கும்போது இவர் ஒரு கோடீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் இவரது குடும்பத்திலிருந்து 1.2 மில்லியன் சவுதி ரியால் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளனர். வளைகுடா நாடுகள் ஒன்றிலிருந்து அவர் முதலீட்டாளர் உரிமம் ஒன்றையும் பெற்றிருந்ததாகக் கூறப்படுகின்றது. இவரது மனைவி, மூன்று குழந்தைகள் உட்பட அனைவரும் சவுதியில் முறையான அனுமதியின்றி தங்கியுள்ளனர். 

அனைத்து வசதிகளும் நிரம்பிய ஆடம்பரமான குடியிருப்பு ஒன்றில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். சொந்தமாகக் கார் ஒன்றும் வைத்திருந்த இந்தக் குடும்பம் உள்ளூர் மற்றும் வெளியூர் போக்குவரத்துக்கு காரைப் பயன்படுத்தியுள்ளனர் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மனிதனின் சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.