தெலுங்கானாவில் பஸ் மீது ரெயில் மோதல்: 12 மாணவர்கள் பலி

தெலுங்கானாவில் பஸ் மீது ரெயில் மோதல்: 12 மாணவர்கள் பலி

enya

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் தூப்ரான் என்ற இடத்தில் காக்கதியா டெக்னோ என்ற தனியார் பள்ளிக் கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து அழைத்து வருகிறார்கள். வழக்கம் போல் இன்று காலை 8.50 மணிக்கு பஸ்சில் மாணவர்கள் பள்ளிக் கூடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதில் டிரைவர் உள்பட 38 பேர் இருந்தனர். வரும் வழியில் மாசாயி பேட்டையில் ரெயில்வே லெவல்கிராசிங் உள்ளது. இங்கு கேட் கீப்பர் இல்லை. அந்த ரெயில் பாதையில் நிஜாமாபாத்தில் இருந்து செகந்திராபாத் செல்லும் பாசஞ்சர் ரெயில் வந்து கொண்டு இருந்தது. 

பஸ் டிரைவர் ரெயில் வருவதை கவனிக்காமல் லெவல் கிராசிங்கை கடக்க முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் வேகமாக வந்து விட்டது. தண்டவாளத்தில் பாதி தூரம் சென்ற பின்பு பஸ் டிரைவர் ரெயில் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வேகமாக பஸ்சை ஓட்டினார். ஆனால் அதற்குள் ரெயில் பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதி ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்று நின்றது. 

இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 12 மாணவர்கள் உடல் சிதறி பலியானார்கள். டிரைவரும் பலியானார். தகவல் கிடைத்ததும் போலீசாரும், அருகில் வசிக்கும் பொதுமக்களும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாணவர்களின் உடல்கள் பஸ் இடிபாடுகளிலும் ஆங்காங்கே வழிநெடுகிலும் ஒரு கி.மீ. தூரத்துக்கு துண்டு துண்டாக சிதறிக் கிடந்தது. அவற்றை போலீசார் சேகரித்தனர். 12 பேரின் உடல்கள் பல துண்டுகளாக கிடந்தது. இது காண்போரின் நெஞ்சை உறையவைப்பதாக இருந்தது. 

காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த 16 மாணவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆள் இல்லாத லெவல் கிராசிங்கால் இந்த விபத்து ஏற்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். விபத்து நடந்து பலமணி நேரம் ஆகியும் ரெயில்வே அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. பொதுமக்களே மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.