“மலேசியாவின் புகழையும் தமிழ்ப் பள்ளி பெருமையையும் உலக அரங்கில் நிலைநாட்டிய பிரவிணா” – டாக்டர் சுப்ரா வாழ்த்து
மலேசியாவின் மாணவர்கள் அதிலும் குறிப்பாக இந்திய மாணவர்கள் உலக அரங்கிலும் மலேசியாவின் கல்வி மேம்பாட்டை எடுத்துக்காட்டும் வண்ணம் தங்களின் திறனை வெளிப்படுத்த முடியும் என மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கும் கெடா மாநிலத்தைச் சேர்ந்த பிரவிணா இராமகிருஷ்ணன் என்ற மாணவிக்கு, மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்துலக ‘மாதிரி ஐக்கிய நாட்டு மன்ற’ மாநாட்டில் முதன் முறையாக கலந்து கொண்டிருக்கும் பிரவிணா அந்த மாநாட்டில் பல விருதுகளைப் பெற்று மலேசியாவின் பெருமையை மேலும் உயர்த்தியிருக்கிறார். இந்த மாநாட்டில் மலேசியா கலந்து கொள்வதும் இதுதான் முதன் முறையாகும்.
பிரவிணா கெடா மாநிலத்திலுள்ள சுல்தான் பட்லிஷா இடைநிலைப் பள்ளி மாணவியாவார்.
அது மட்டுமன்றி 14 வயதே நிரம்பிய பிரவிணா கூலிம் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவியும் ஆவார். இந்த வெற்றியின் மூலம் தமிழ்ப் பள்ளியிலிருந்து உருவாகும் மாணவர்கள் அனைத்துலக அளவிலும் போட்டியிடும் திறன் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபித்து தமிழ்ப் பள்ளிகளின் மதிப்பையும் உயர்த்தியிருக்கிறார் பிரவிணா.
உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாட்டு மன்றத்தின் மாநாட்டைப் போலவே, மாதிரி மாநாடு, மாணவர்களுக்காக அனைத்துலக அளவில் நடத்தப்படுவது வழக்கம். அத்தகைய மாநாடு இந்த முறையும் அமெரிக்காவில் நடைபெற்றது.
அமைதிக்கான யுனெஸ்கோ மையத்தின் ஏற்பாட்டில் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் கோடைகால விடுமுறை முகாமாக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இரண்டு வார கால மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த ‘மாதிரி அனைத்துலக ஐக்கிய நாட்டு மன்றத்தின்’ மாநாடும் நடைபெற்றது.
கலாச்சார பரிமாற்றமும், கல்வி கற்றலும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
அனைத்துலக அளவில் 96 நாடுகளின் பிரதிநிதிகள் கூடியிருந்த இந்த மாநாட்டில் பிரவிணா தனது கட்டுரையை சமர்ப்பித்து உரையை நிகழ்த்தியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு ‘சிறந்த பேச்சாளர்’ மற்றும் ‘சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட கட்டுரை’ என்ற துறைகளில் பிரவிணாவுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இது மட்டுமின்றி, “தனது திறனை அதிக அளவில் மேம்படுத்திக்கொண்ட பிரதிநிதி” என்ற விருதும் பிரவிணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரவிணாவின் சாதனைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற சாதனைகள், நமது மலேசிய நாட்டு கல்வி முறையின் மேன்மையை வலியுறுத்துகிறது என்பதோடு, நமது எதிர்கால இளைய சமுதாயம் குறித்த நம்பிக்கையையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.
இந்திய மாணவ சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து மஇகா கவனம் செலுத்தி, இந்தியர் புளுபிரிண்ட் போன்ற திட்டங்களின் வழி, நமது இந்திய சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டுக்குப் பாடுபட்டு வரும் வேளையில் பிரவிணா போன்றவர்களின் அனைத்துலக சாதனைகள் மற்ற இந்திய மாணவர்களுக்கு ஓர் ஊக்க சக்தியாகத் திகழும் என்பதோடு, நமது பணிகளை மேலும் முடுக்கிவிட ஓர் உந்துதலாகவும் திகழும் எனவும் கருதுகிறேன். தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவர்களின் திறனுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து நமக்கெல்லாம் பெருமை சேர்ந்திருக்கும் பிரவிணா மேலும் இது போன்ற வெற்றிகள் பல பெறவும் வாழ்த்துகிறேன்.