06-08/2017 அன்று காலை புதிதாய் கட்டப்பட உள்ள சுங்கை சிப்புட் ஹீவுட் தமிழ்ப் பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை ம.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையேற்று அடிக்கல் நாட்டினார். அவருடன் இந்த நிகழ்வில் மத்திய கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கலந்து கொண்டார்.
இந்த பள்ளி மலேசியாவில் துவங்கப்படும் 529 வது தமிழ் பள்ளியாகும்.. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரையில் இருக்கும். கடந்த ஜூன் மாதம் 19 தேதி இந்த பள்ளி துவங்குவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. சுமார் 12.45 மில்லியன் ரிங்கிட் செலவில் இந்த பள்ளி கட்டப்படுகிறது. திறப்பு விழாவிற்கு வரமுடியாவிட்டாலும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
சுங்கை சிப்புட் ஹீவுட் தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
• இன்று அடிக்கல் நாட்டப்படும் சுங்கை சிப்புட் ஹீவுட் தமிழ்ப் பள்ளி நாட்டின் 529 தமிழ்ப் பள்ளியாகும். சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் இந்தப் பள்ளி அடுத்த 12 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆண்டு முதல் மாணவர்கள் தங்களின் கல்வியை இந்தப் பகுதியில் தொடங்க முடியும்.
• ஹீவுட் தமிழ்ப் பள்ளி முழுமையாக இயங்கும்போது சுமார் 500 முதல் 600 மாணவர்கள் வரை இங்கு பயில முடியும்.
• தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்களில் ஏறத்தாழ 80 சதவீதத்தினர் தற்போது பட்டதாரிகளாக இருக்கின்றனர். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த விகிதாச்சாரம் 90 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.
• தமிழ்ப் பள்ளி மாணவர்களை மலாய் மொழியிலும், ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்கும் வண்ணம் அடைவு நிலையை உயர்த்தும் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்ப் பள்ளிகளையும், அதன் மாணவர்களையும் அனைத்துத் தளங்களிலும் தரம் உயர்த்துவதற்கான வரைத் திட்டத்தை நாங்கள் பிரதமரிடம் சமர்ப்பித்தோம். அதன்படிதான் தற்போது கட்டம் கட்டமாக அந்த வரைத் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம்.
• தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திறமை என்பது தமிழ்ப் பள்ளியோடு முடிந்து விடுவதல்ல. தமிழ்ப் பள்ளியில் படித்து முடிந்த பின்னர் இடைநிலைப் பள்ளியிலும், பல்கலைக் கழகத்திலும் வெளியுலகத்திலும் ஒருவன் எவ்வாறு சாதனை படைக்கிறான் என்பதை வைத்துத்தான் தமிழ்ப் பள்ளிகளின் பெருமையும் உயரும்.
எனவே, தமிழ்ப் பள்ளியிலிருந்து சிறந்த மாணவர் சமுதாயம் உருவாக நாம் அனைவரும் இங்கேயே, தமிழ்ப் பள்ளிகளிலேயே சிறந்த அஸ்திவாரத்தைப் போட வேண்டும் – இப்போது இங்கே கட்டப்படவிருக்கும் ஹீவுட் தமிழ்ப் பள்ளிக்கான அஸ்திவாரத்தைப் போல!
• அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளை ஒரேயடியாக மாற்றுவதற்கு கோடிக்கணக்கான ரிங்கிட் தேவைப்படும். அதனால்தான் கட்டம் கட்டமாக நாம் தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்தி வருகிறோம். இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகளின் வசதிகளை அதிகரித்து வருகிறோம். குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட தமிழ்ப் பள்ளிகளின் இட மாற்றத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.