சுங்கை பூலோ – காஜாங் இடையேயான மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட சேவையை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று 17/01/2017 மாலை நடந்த விழாவில் திறந்து வைத்தார். விழாவில் பிரதமருடன் அவரது மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூர், துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹித் ஹமீதி, மத்திய அமைச்சர்கள் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ ஷாரி மொக்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பிரதமர் மலேசியாவின் மெட்ரோ ரெயில் சேவை நியூயார்க் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் உள்ள சேவையைவிட சிறப்பாக இருப்பதாக ஒருவர் தெரிவித்தார் என குறிப்பிட்டார். இதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த ஒரு மெட்ரோ சேவை நமது நாட்டு மக்களுக்கு வழங்கி இருப்பதாக கூறினார்.
2009 இல் காகித திட்டமாக இருந்த இந்த மெட்ரோ ரெயில் திட்டம் இன்று முழுமையடைந்து தமக்கு திருப்தி அளிப்பதாக பிரதமர் கூறினார். சற்று தாமதமாக 2011 இல் தான் சுங்கை பூலோ – காஜாங் மெட்ரோ ரெயில் திட்டம் துவங்கப்பட்டது என்றாலும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னராகவே முடிந்ததுடன் ஒதுக்கப்பட நிதியான 23 பில்லியன் ரிங்கிட்டை விட 2 பில்லியன் ரிங்கிட் குறைந்த செலவில் முடிக்கப்பட்டுள்ளது என்பதில் தான் பெருமையடைவதாகவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட அனைவரின் கூட்டு முயற்சியே இந்த வெற்றிக்கு காரணம் எனவும் பிரதமர் கூறினார்.
51 கிமீ ஓடும் சுங்கை பூலோ – காஜாங் மெட்ரோ ரெயில் தடத்தில் மொத்தம் 31 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் இரண்டாம் கட்டமாக இன்று 19 நிறுத்தங்கள் சேவைக்கு வருகின்றன. இதில் 7 பாதாள ரெயில் நிலையங்களும் அடக்கமாகும். இந்த மெட்ரோ பெர்யில் திட்டத்தால் சுமார் 1.2 மில்லியன் மலேசிய மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பயன் பெறுவர் என பிரதமர் கூறினார்.
சூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என்ற வகையில் இந்த தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும். ஒவ்வொரு ரெயிலிலும் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு நேரத்தில் 1200 பயணிகளளும் ஒரு நாளைக்கு 400,000 பயணிகளும் இந்த மெட்ரோ ரெயில் தடத்தில் பயணிப்பர்.