ம.இ.கா ஏற்பாட்டில் மலேசிய மனித உரிமை ஆணையத்துடன் (SUHAKAM) ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி 04/07/2017 காலை 10.30 மணிக்கு ம.இ.கா தலையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் மனித உரிமைகள் பற்றி நடந்தது.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தன்ஸ்ரீ ரஜாளி பின் இஸ்மாயில் மனித உரிமைகளை காப்பதில் ம.இ.கா வின் முயற்சிகளை பாராட்டினார். அவர் மேலும் கூறுகையில் மனித உரிமைகள் என்பது ஏதோ ஒரு நாட்டின் தனிப்பட்ட பிரச்சனை இல்லை என்றும் இன்றைய சூழலில் மனித உரிமைகளை பொறுத்தவரையில் நாம் அனைவரும் உலகின் குடிமக்கள் என்றார்.
இந்த கலந்துரையாடலில் ம.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்துகொண்டார். டாக்டர் சுப்ரா பேசுகையில் மனித உரிமைகள் கண்கானிப்பில் நமது மதிப்பீடு சமீபத்தில் உயர்ந்து மலேசியா இரண்டாம் நிலைக்கு முன்னேறியிருப்பதாக குறிப்பிட்டார். மனித உரிமைகளை உள்ள்நாட்டில் காக்கும் மலேசியாவின் முயற்சிக்கு இதுவே சான்று என்றும் அவர் கூறினார்.
இருந்தாலும் இந்திய சமூகத்தை பொறுத்தவரை இன்றும் சில பிரச்சனைகள் களையப்பட வேண்டி இருக்கின்றன. அதில் முக்கியமானது காவல்நிலைய மரணங்கள். சமீப காலங்களில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்து காணப்படுவதாகவும் அதை சிலர் அரசியலாக்குவதையும் டாக்டர் சுப்ரா கூறினார். யாரும் நியாயமற்ற முறையிலும் மனிதத்தனமையற்ற முறையிலும் நடத்தப்படக்கூடாது என்றும் அனைவருக்கும் சமமாக நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதை போலவே இந்திய சமூகத்தினரின் ஆவணப் பதிவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மைடப்தார் நிகழ்ச்சியின் மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது. ம.இ.கா தேசிய அளவில் இந்த பிரச்சனையை திர்ர்க்க முயற்சி செய்தது. இந்த நிகழ்ச்சியின் போது சில குழந்தைகளுக்கு கூட சரியான பதிவுகளும் ஆவணங்களும் இல்லாமல் இருக்கின்றன. இது அந்த குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைப்பதிலும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயம் ஏனென்றால் கல்வி மட்டுமே நம்மை ஏழ்மையில் இருந்து வெளிக் கொண்டு வரும். அனைத்து ம.இ.கா தலைவர்களும் நமது சமூகத்தின் உரிமைகளின் பாதுகாவலர்களே.
இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா தேசிய மகளிர் பிரிவு தலைவி மோகனா முனியாண்டி, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் ஆகியோருடன் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், ம.இகா கிளை தலைவர்கள் மற்றும் ம.இ.கா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.