புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் மாறுவாழ்வு பெற்றவர்கள் இயல்பான வாழ்க்கை உத்தரவாதத்திற்கு வேலை வாய்ப்புகான அகப்பக்கம் கடந்த 20-02-2017 அன்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சரும் ம.இ.கா. தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்துகொண்டு கேன்சர்ப்ளை என்ற சமூக அமைப்பை துவங்கி வைத்தார். அந்த நிகழ்வில் அவர் கூறியதாவது..
நாட்டில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் மாறுவாழ்வு பெற்றவர்கள் இயல்பான வாழ்க்கையை வாழும் பொருட்டும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் பொருட்டும் இணையத் தொடர்பு சேவை ஒன்று இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஓராண்டுக்கு ஏறக்குறைய 20,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 10,000 பேர் புற்றுநோய்க்கான முழு சிகிச்சையைப் பெற்று குணமடைகின்றனர். அவ்வகையில், தற்பொழுது நாட்டில் ஏறக்குறைய ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று மறுவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மறுவாழ்வு பெற்றிருக்கும் இவர்களுடைய வாழ்க்கையானது மற்றவர்கலைப் போன்று எல்லா வகையிலும் முழுமைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வகையில், புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கக்கூடிய சவால்களுக்குத் தீர்வு காண வேண்டும். அவர்கள் எதிர்நோக்கும் சவால்களில் பொருளாதார ரீதியிலான சிக்கல் முக்கிய சவாலாக அமைந்துள்ளது.
இச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் மற்றவர்களைப் போன்று இவர்களுக்கும் வேலைக்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். அதேநேரத்தில், வியாபாரத் துறைகளில் ஈடுபடக்கூடியவர்களுக்குச் சமுதாயம் ஆதரவினைக் கொடுத்து, அவர்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகளும் உருவாக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், இன்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சில சமூகவியல் முனைவர்களின் முயற்சியில் புற்றுநோய் சிகிச்சையின் வழி மறுவாழ்வு பெற்றவர்களுக்குரிய வேலை வாய்ப்புக்கான அகப்பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, மறுவாழ்வு பெற்று வேலை தேடுபவர்களையும், வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய நிறுவனங்களையும் ஒன்றாக இணைப்பது மட்டுமின்றி, வியாபாரத் துறையில் ஈடுபட விரும்புவர்களுக்கும் அதற்குரிய பொருள்களை வாங்கி வழங்கக்கூடியவர்களையும் இணைப்பதன் நோக்கத்தில் மேற்குறிப்பிட்ட அகப்பக்கம் உருவாக் கப்பட்டுள்ளது.
புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்கள் இயல்பான வாழ்க்கையைப் பெற வேண்டும் என்ற ஒரு புனிதமான நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாக இஃது அமைந்துள்ளது. மிகவும் அருமையான திட்டமுமாகும். இத்திட்டத்திற்கு பொதுமக்களும் நல்லதோர் ஆதரவினை வழங்குவதோடு சம்மந்தப்பட்டவர்கள் அவ்வகப்பக்கத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, நிறுவன உரிமையாளர்கள் இதனை நன்கு பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை முன்வந்து வழங்க வேண்டும். பொதுமக்களும் அவர்களுக்குரிய வகையில் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.