சுங்கை சிப்புட்டில் மேலுமொரு புதிய தமிழ்ப்பள்ளி நிர்மாணிக்கப்பட உள்ளது. ஹீவூட் தமிழ்ப்பள்ளி என அழைக்கப்படவுள்ள அப்பள்ளிக் கட்டப்படுவதற்கான அங்கீகாரக் கடிதம் இன்று அதன் குத்தகையாளரிடம் வழங்கப்பட்டது.
கோலாலம்பூரிலுள்ள சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் அப்பள்ளி கட்டப்படுவதற்கான அங்கீகாரக் கடிதத்தை வழங்கினார்.
11வது மலேசியத் திட்டத்தை சமர்ப்பித்தப் போது, பிரதமர் நாட்டில் மேலும் ஆறு புதியப் பள்ளிகள் கட்டப்படும் என அறிவித்தார். அந்த வகையில் ஏற்கனவே, சில பள்ளிகள் கட்டுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு விட்டன.
சுங்கை சீப்புட்டில் கட்டப்படவிருக்கும் இப்பள்ளி 529 வது தமிழ்ப்-பள்ளியாகும். 12 வகுப்பறைகளைக் கொண்ட இப்பள்ளி சுமார் 12.45 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படவிருக்கிறது.
இதர ஐந்து பள்ளிகள், சுங்கைப் பட்டாணியில் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி, கிள்ளானில் தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி, பெட்டாலிங் ஜெயாவில் பி.ஜே.எஸ்.ஐ. தமிழ்ப்பள்ளி, உலு லங்காட்டில் பண்டார் மக்கோத்தா செராஸ் தமிப்பள்ளி மற்றும் மாசாயில் பண்டார் செரி ஆலாம் தமிழ்பள்ளி ஆகியவையாகும்.
இந்நிகழ்வில், கல்வித் துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ தேவமணி, பிரதமர் துறையின் கீழ் செயல்படும் செடிக் தலைமை இயக்குநர் டத்தோ எஸ். என். ராஜேந்திரன், பேரா மாநில ம இ கா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.