உலகின் மூன்றில் ஒரு குழந்தை திருமணங்கள் இந்தியாவில் நடக்கின்றன: ஐ.நா. கவலை

உலகின் மூன்றில் ஒரு குழந்தை திருமணங்கள் இந்தியாவில் நடக்கின்றன: ஐ.நா. கவலை

india

உலகின் 42 சதவீதம் குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில் நடைபெறுவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை, குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் ‘டாப் டென்’ நாடுகளில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான ‘யூனிசெப்’ எனப்படும் சர்வதேச குழந்தைகள் கல்வி நிதியம் இது தொடர்பாக வெளியிட்ட ‘குழந்தை திருமணம் ஒழிப்பு’ என்ற ஆய்வறிக்கையில், உலகளாவிய அளவில் வாழும் சுமார் 70 கோடி பெண்கள் தங்களது 18-ம் வயதை அடைவதற்கு முன்னதாகவே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும், 25 கோடி பெண்கள் 15-வது வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிடுகிறது. 

இந்தியாவில் தற்போது வாழும் 20 முதல் 49 வயதுக்குட்பட்ட 27 சதவீதம் பெண்கள் 15 வயதுக்கு முன்னதாகவும், இதே வயது வரம்புக்குட்பட்ட 31 சதவீதம் பெண்கள் 15க்கும் 18க்கும் இடைப்பட்ட வயதிலும் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் எனவும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 

டொமினியன் குடியரசு மற்றும் இந்தியாவில் வாழும் சம வயது கொண்டவர்களில் வசதி படைத்த பெண்களை விட 4 ஆண்டுகள் முன்னதாகவே ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.