திருப்பதியை பெருநகரமாக்கும் பணி தொடங்கியது

திருப்பதியை பெருநகரமாக்கும் பணி தொடங்கியது

10979411

திருப்பதி ஆன்மிக தலமாக உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையாக விளங்கும் திருப்பதியை அனைத்து வசதிகளுடன் கூடிய பெரு நகரமாக்க (மெகாசிட்டி) ஆந்திர அரசு திட்டமிட்டு உள்ளது. இதன்படி திருப்பதி நகரில் வளையம் போல் வட்ட வடிவ சாலைகள் அமைக்கப்படுகிறது. மேலும் மேம்பாலம், பறக்கும் சாலைகள், சுரங்க பாதைகள் அமைக்கப்படுகிறது.

தற்போது திருப்பதி நகர எல்லை காளஹஸ்தி வரை உள்ளது. மெகாசிட்டியாகும் போது இதன் எல்லை நகரி வரை நீடிக்கப்படும். மேலும் திருப்பதியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு நேரடி சாலை வசதிகள், தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

பெருநகர வடிவமைக்கும் பணியை சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைத்து முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவர்கள் தங்கள் பணியை தொடங்கினார்கள். கட்டுமான நிறுவனம் தொழில்நுட்ப அதிகாரிகள் நேற்று திருப்பதி வந்தனர்.

திருப்பி நகர வளர்ச்சி குழும அதிகாரி வெங்கடேஸ்வர ரெட்டியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 50 ஆண்டு கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்படுகிறது.

எனவே திருப்பதியின் தற்போதைய பூகோள வரை படங்கள், நகரின் தற்போதைய நிலை, எதிர்காலத்தில் தேவையான வசதிகள் போன்ற விவரங்களை கேட்டு பெற்றனர்.

திட்ட வரைபடம் தயாரானதும் பெருநகரம் அமைப்பதற்கான நிதி தேவைகள் தெரிய வரும். தேவையான நிதி ஒதுக்கப்பட்டதும் பணி துரிதப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.