லார்ட்சில் இந்தியா வெற்றி

லார்ட்சில் இந்தியா வெற்றி

21slide1

லண்டன்: பரபரப்பான லார்ட்ஸ் டெஸ்டில் ‘வேகத்தில்’ மிரட்டிய இஷாந்த் சர்மா 7 விக்கெட் கைப்பற்ற, இந்திய அணி, இங்கிலாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட், ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் வரலாற்று சிறப்புமிக்க லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 295, இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 342 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நான்காவது நாள் ஆட்ட முடிவில், 4 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து, 214 ரன்கள் பின்தங்கி இருந்தது.
ரூட் அரைசதம்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஜோ ரூட், மொயீன் அலி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஒரு மணி நேரத்தில் 35 ரன்கள் மட்டும் எடுத்தனர். பின், இஷாந்த் சர்மா ஓவரில் 3 பவுண்டரி அடித்த ஜோ ரூட், தனது 5வது அரைசதம் கடந்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 101 ரன்கள் சேர்த்தது. உணவு இடைவேளைக்கு சற்று முன், இஷாந்த் சர்மா ‘பவுன்சரில்’ மொயீன் அலி (39) அவுட்டாக, சற்று ஆறுதல் கிடைத்தது. இது தான் போட்டியில் திருப்பம் ஏற்பட உதவியது.
இங்கிலாந்து ‘சரண்டர்: உணவு இடைவேளைக்குப் பின் இஷாந்த் சர்மா விஸ்வரூபம் எடுத்தார். இவரது அசுர வேகப்பந்துவீச்சில் இங்கிலாந்து அணி அப்படியே ‘சரண்டர்’ ஆனது. முதலில் மாட் பிரையர் (12) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இஷாந்த், அடுத்து வந்த பென் ஸ்டோக்சை, ‘டக்’ அவுட்டாக்கினார். இந்திய அணிக்கு நீண்ட நேரமாக தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ஜோ ரூட்டையும் (66) இதே ஓவரில், இஷாந்த் சர்மா பெவிலியன் அனுப்ப, வெற்றி நம்பிக்கை அதிகரித்தது.
அடுத்த சில நிமிடங்களில் ஸ்டூவர்ட் பிராட்டையும் (8) வெளியேற்றினார் இஷாந்த் சர்மா. உணவு இடைவேளையின் போது, 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் என்றிருந்த இங்கிலாந்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து, 216க்கு 9 என, தடுமாற, அணியின் தோல்வி உறுதியானது.
சபாஷ் ஜடேஜா: கடைசியில் ஆண்டர்சனை (2), ரவிந்திர ஜடேஜா ரன் அவுட்டாக்க, கேப்டன் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் வெற்றி உற்சாகத்தில் மிதந்தனர். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 223 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, படுதோல்வி அடைந்தது.
இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1–0 என, முன்னிலை பெற்றது.
ஆட்டநாயகனாக இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது டெஸ்ட் வரும் 27ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது.
கபில்தேவுக்கு அடுத்து
கடந்த 1986ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி (341, 136/5 ரன்கள்) லார்ட்ஸ் டெஸ்டில், இங்கிலாந்து அணியை (294, 180 ரன்கள்), 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் பின், தோனியின் இந்திய அணி இங்கு வென்றுள்ளது.
புதிய வரலாறு
கடந்த 1986ல் இந்திய அணி லார்ட்சில் வென்றது. இப்போது 28 ஆண்டுகள் கழித்து, இம்மைதானத்தில் 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, புதிய வரலாறு படைத்தது.
3 ஆண்டு இடைவெளி
கடந்த 1983ல் கபில்தேவின் இந்திய அணி உலக கோப்பை வென்றது. அடுத்த மூன்று ஆண்டுகளில், அதாவது 1986ல் லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி முதல் வெற்றியை பெற்றது. இதேபோல, 2011ல் உலக கோப்பை வென்றது தோனி தலைமையிலான இந்திய அணி. சரியாக 3 ஆண்டுகள் கழித்து, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வென்றது, அபூர்வமாக இருந்தது.
தோல்விக்கு முற்றுப்புள்ளி
கடந்த 2011ல் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி முதல் டெஸ்டில் வென்றது. இதன் பின் அடுத்த இரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது. பின், இங்கிலாந்து (0–4), ஆஸ்திரேலியா (0–4) தொடரை முழுமையாக இழந்தது.
பின், தென் ஆப்ரிக்கா (0–1), நியூசிலாந்துக்கு எதிரான (0–1) தலா இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 தோல்வி, 2 ’டிரா’ செய்தது. இப்படி, அன்னிய மண்ணில் பங்கேற்ற 15 டெஸ்டில், 10 தோல்வி, 5 ‘டிரா’ செய்த இந்திய அணி, 16வது டெஸ்டில் தான் வெற்றி பெற்றுள்ளது.
முதன் முறை
லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் புவனேஷ்வர் குமார் 6, இரண்டாவது இன்னிங்சில் இஷாந்த் சர்மா 7 விக்கெட் சாய்த்தனர். அன்னிய மண்ணில் ஒரே டெஸ்டில், இந்திய அணியின் இரு வேகப்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றுவது இது தான் முதன் முறை.
1
அன்னிய மண்ணில் 300 அல்லது அதற்கும் மேல் இலக்கு நிர்ணயித்த போட்டிகளில் இந்திய அணி பெரும்பாலும் வெற்றி பெற்றது. கடந்த 1977ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் மட்டும் தோற்றது.
1,124 நாட்கள்
இந்திய அணி கடைசியாக 2011ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, ஜமைக்கா டெஸ்டில் ஜூன் 23ல் வெற்றி பெற்றது. இதன் பின், 1,124 நாட்கள் கழித்து, அதாவது 3 ஆண்டுக்குப் பின், இப்போது தான், அன்னிய மண்ணில் வெற்றி பெற்றது.
78 ஆண்டு சாதனை தகர்ந்தது
கடந்த 1936ல் இந்திய அணியின் அமர்சிங், லார்ட்ஸ் மைதானத்தில் 35 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தியது தான் சிறந்த பவுலிங்காக இருந்தது. இப்போது, 74 ரன்னுக்கு 7 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா, லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பான பவுலிங்கை பவுலிங் செய்தார்.
இது தான் ‘பெஸ்ட்’
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. கடந்த பிப்., மாதம் நியூசிலாந்துக்கு எதிரான வெலலிங்டன் டெஸ்டில், 51 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தியது தான் இவரது சிறந்த பவுலிங்காக இருந்தது, நேற்று 74 ரன்னுக்கு 7 விக்கெட் சாய்க்க, இதுவே இவரது ‘பெஸ்ட்’ ஆக அமைந்தது.
* தவிர, அன்னிய மண்ணில் 7 விக்கெட் வீழ்த்திய, இந்திய அணியின் முதல் வேகப்பந்து வீச்சாளர் இவர் தான்.
6
சச்சின் ஓய்வுக்குப் பின் பங்கேற்ற 5 டெஸ்டில் இந்திய அணி 3ல் ‘டிரா’ செய்து, 2ல் தோற்றது. 6வது முறையாக லார்ட்சில் களமிறங்கிய இந்திய அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது.
17 க்கு 2
இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் லார்ட்ஸ் மைதானத்தில் மொத்தம் 17 டெஸ்டில் பங்கேற்றது. இதில் 11 போட்டிகளில் தோற்ற இந்திய அணி 4ல் ‘டிரா’ செய்தது. 1986 மற்றும் இப்போது என, 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
வாழ்த்து மழையில்…
லார்ட்சில் இந்திய அணி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு, கிரிக்கெட் உலகின் பிரபலங்கள் ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்தனர். இதன் விவரம்:
* பிஷன் சிங் பேடி (இந்திய அணி முன்னாள் கேப்டன்):
இஷாந்த் சர்மா சிறப்பாக செயல்பட்டார். வெல்டன் இந்தியா. இப்போதைய நிலையில், இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளர் தேவையில்லை. தலைமை ஆசிரியர் தான் வேண்டும்.
* மஞ்ச்ரேக்கர் (முன்னாள் இந்திய வீரர்):
உணவு இடைவேளை முடிந்த பின் திரும்பிய இங்கிலாந்து அணி, தற்கொலை செய்து கொண்டது போல, ஒரு மணி நேரத்தில் ஆல் அவுட்டானது. 5 நாட்களும் அசத்திய இந்திய அணி, இந்த வெற்றிக்கு தகுதியானது தான்.
* ஷேன் வார்ன் (ஆஸி.,):
உணவு இடைவேளைக்குப் பின் வந்த ஒரு மணி நேரம், இங்கிலாந்து அணிக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அசத்தலாக செயல்பட்ட இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி விட்டது. ஆடுகளத்தில் பச்சை புற்கள் நிறைந்து, வேகப்பந்துக்கு சாதகமாக இருந்த நிலையில், ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து வாய்ப்பை வீணடித்து விட்டது.
* அலெக் ஸ்டூவர்ட் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன்):
இங்கிலாந்துக்கு சாதகமான ஆடுகளத்தில், அவர்களை விட சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். லார்ட்சில் பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்கு முழுத் தகுதி இந்தியாவுக்கு உள்ளது.
* மைக்கேல் வான் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன்):
ஒரு மணி நேரத்தில் எல்லாம் மாறி விட்டது. சரியான தலைமை பண்பு இல்லை. பேட்டிங், பவுலிங் மோசமாக உள்ளது. இங்கிலாந்து அணியை நினைத்தால் பயமாக உள்ளது. கட்டாயம் மாற்றம் தேவை.
தோனிக்கு பெருமை
இஷாந்த் சர்மா கூறுகையில்,‘‘ கேப்டன் தோனி அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். அனைத்து வீரர்களையும் உற்சாகப்படுத்துகிறார். ‘தேவையான உயரம் உன்னிடம் உள்ளது, நல்ல ‘பவுன்சராக’ வீசவும்,’ என, என்னிடம் தெரிவித்தார். இப்போட்டியில் வீழ்த்திய அனைத்து விக்கெட்டுகளும் என்னுடையது அல்ல, தோனிக்குத் தான் சேரும்,’’ என்றார்.
என்றும் நினைவில் நிற்கும்
இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ 2011, இங்கிலாந்து தொடரில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். தற்போதைய லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி, என்றென்றும் நினைவில் நிற்கும். ஏனெனில், இந்திய அணியில் உள்ள தற்போதைய வீரர்கள் பெரும்பாலும், இங்கிலாந்து மண்ணில் (தோனி, இஷாந்த், காம்பிர் தவிர) டெஸ்டில் பங்கேற்றதே இல்லை. இருப்பினும், சிறப்பாக செயல்பட்டு அசத்தினர்,’’ என்றார்.