நவம்பர் 17, கொட்டி வரும் கனமழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. பொதுமக்கள் தாங்க முடியாத துயரத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். மழை நீரில் ஏராளமான வீடுகள் முழ்கியுள்ளன. நகரில் தண்ணீரில் பரிதவிக்கும் மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏரி, குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளால் இன்று தண்ணீர் முழுவதும் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாகவே சென்னை சாலைகளில் படகுகள் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.