மலேசிய விமானத்தில் :எய்டஸ் கருத்தரங்கில் பங்கேற்க சென்ற பல நிபுணர்கள் பலி

மலேசிய விமானத்தில் :எய்டஸ் கருத்தரங்கில் பங்கேற்க சென்ற  பல நிபுணர்கள் பலி

chinaaa

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று புறப்பட்டு சென்றது. 

உக்ரைன் நாட்டு வான் எல்லையில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் ஏவுகணையின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த கொடூர சம்பவத்தில் 280 பயணிகள் 15 சிப்பந்திகள் என அந்த விமானத்தில் பயணித்த 295 பேரும் உடல் கருகி பலியாகினர்.

பலியானவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எய்ட்ஸ் ஒழிப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தலைசிறந்த நிபுணர்கள் என்பதும், ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் நடைபெறும் 20-வது சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்ற போது இவர்கள் இந்த கோர முடிவை சந்தித்துள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பலியானவர்களில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிளென் ரேமண்ட் தாமஸ், தாயின் கருவில் இருந்து குழந்தையை தாக்கும் எய்ட்ஸ் தொற்றுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜோயெப் லேஞ்ச், அமெரிக்க டாக்டர் சீமா யாஸ்மின் உள்ளிட்ட பலர் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான ஆராய்ச்சி, பிரசாரம் மற்றும் தொண்டுகளின் மூலம் இந்த உலகுக்கு அரிய சேவையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.