டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 49 நாட்கள் ஆட்சி நடத்தி விட்டு பதவி விலகினார். இதையடுத்து அங்கு கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்போது அங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் அழைப்பு விடுக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது. பாரதிய ஜனதா அதை ஏற்கும். ஆனால் அந்தக் கட்சிக்கு தேவையான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ஆதரவு அளிக்க இன்னும் தயார் ஆகவில்லை. அரசு அமைத்துவிட்டு, எம்.எல்.ஏ.க்களை (குதிரை பேரம்) வாங்கிக்கொள்ளலாம் என்று பாரதிய ஜனதா கணக்கு போடுகிறது” என சாடினார்.
மேலும், “துணை நிலை கவர்னர் தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்வாரா அல்லது அரசியல் சட்டத்தை காப்பாற்றுவாரா என்பதை நாடு கூர்ந்து கவனிக்கும். ஒரு முறை ஆட்சி அமைக்க மறுத்து விட்ட கட்சியை துணை நிலை கவர்னர் மீண்டும் அழைக்க முடியுமா” என கேள்வியும் எழுப்பினார்.
அத்துடன் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களை வாங்கும் முயற்சி தோல்வி கண்டதையடுத்து, 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வாங்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது. ஒரு எம்.எல்.ஏ.வுக்கு விலை ரூ.20 கோடி. 2 மந்திரி பதவி, 4 பேருக்கு வாரியத்தலைவர் பதவி” என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
ஆனால் பாரதிய ஜனதா முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுத்தார். இது தொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாரதிய ஜனதா ஒருபோதும் குதிரை பேரத்தில் ஈடுபட்டது கிடையாது. பாரதிய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். டெல்லியில் அரசு அமைக்க பாரதிய ஜனதாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஆதரவு அளிக்கின்றனரா என கேட்கிறீர்கள். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மொத்த இடங்கள் – 70
பா.ஜனதா – 28
ஆம் ஆத்மிகட்சி- 28
காங்கிரஸ் – 8
ஐ.ஜனதாதளம் – 1
அகாலிதளம் – 1
சுயேச்சை -1
காலி இடங்கள் – 3
5 பேர் ஆதரவு தேவை
சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 31 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்கிய பாரதிய ஜனதாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.க்களாகி விட்டனர். இதனால் அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகியதால் அந்தக் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 28 ஆகி உள்ளது.
அகாலிதளம் கட்சி அதன் கூட்டணிக் கட்சி ஆகும். எனவே 29 உறுப்பினர்கள் அந்த அணியில் உள்ளனர். ஆட்சி அமைக்க 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த வகையில் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பாரதிய ஜனதாவுக்கு தேவைப்படுகிறது. அந்தக் கட்சிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ஆதரவு அளிப்பார்கள் என கூறப்படுகிறது. இருப்பினும
் ஏற்கனவே ஒருமுறை ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா மறுத்துவிட்ட நிலையில், இப்போது ஆட்சி அமைக்கும் உரிமையை அந்தக் கட்சி கோருவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையே பா.ஜனதா மீது கெஜ்ரிவால் அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக கூறி அவருக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆர்.பி.சிங் நோட்டீசு அனுப்பி உள்ளார். அதில் கெஜ்ரிவால் ரூ.1 கோடி நஷ்டஈடு வேண்டும் என்று கூறியிருக்கிறார்.