கர்நாடகாவில் பலத்த மழை: காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு

கர்நாடகாவில் பலத்த மழை: காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு

itaip

பெங்களூர்: கர்நாடக மாநிலம் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கு மைசூர், மண்டியா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பாசனத்திற்காக விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டமும் 90.25 அடியாக உயர்ந்துள்ளது. மைசூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மொத்தம் 2,284 அடி உயரமுள்ள கபினி அணையில் நேற்று மாலை நிலவரபடி 2,281.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

குடகு மாவட்டம், சோமவார்பேட்டை தாலுகாவில் 2,859 அடி உயரமுள்ள ஹாரங்கி அணையில் 2,852.64 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. பாசனத்திற்காக விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் மழை கொட்ட தொடங்கியுள்ளதால், இவ்வார இறுதிக்குள் ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகள் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.