மார்ச் 28, காவிரியின் குறுக்கே மேகதாது, ராகி மணல் ஆகிய இடங்களில் 2 புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி விட்டது. இதற்காக கர்நாடக மாநில பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழ்நாட்டில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
விவசாயிகள் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவையும் ஆதரவு அளிப்பதாக அறிவித்திருக்கின்றன. தமிழ்நாடு டிப்பர் லாரி மற்றும் மண் அள்ளும் எந்திர உரிமையாளர் சங்கமும் இந்த போராட்டத்தை ஆதரித்தது.
இதனால் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒன்றிரண்டு தேனீர் கடைகள் மட்டும் திறந்து இருந்தன. அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பெரும்பாலான இடங்களில் போலீசார பாதுகாப்பிற்கு நின்றனர்.