மார்ச் 16, ஈராக்கில் முன்னாள் அதிபராக இருந்த சதாம் உசேன் கடந்த 2003–ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவரது ஆட்சியின் போது மனிதாபிமான மற்ற முறையில் ஷியா பிரிவினர் மற்றும் குர்த் இன மக்களை கொன்று குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதை தொடர்ந்து கடந்த 2006–ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் சொந்த ஊரான திக்ரித் அருகேயுள்ள அல்– அவ்ஜா கிராமத்தில் புதைக்கப்பட்டது. பின்னர் அதன் மீது அவரது கல்லறை கட்டப்பட்டது. கடந்த ஆண்டு திக்ரித் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதை மீட்க ஈராக் ராணுவம் ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் சண்டையிட்டது.
அதை தொடர்ந்து சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அவரது உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்தனர். அங்கு கல்லறை மட்டும் இருந்தது.
சண்டை தீவிரமடைந்ததை தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதலில் சதாம் உசேன் சமாதி முற்றிலும் அழிந்து சேதம் அடைந்தது. தற்போது அங்கு கான்கிரீட் கூரைகளின் இடிபாடுகள் கொட்டிக்கிடக்கின்றன. ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பிடியில் இருந்து திக்ரித் பகுதியை மீட்டு விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.