ஒபாமாவின் இந்திய பயணம்: கடுமையான பின் விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் அமெரிக்கா கடும் எச்சரிக்கை

ஒபாமாவின் இந்திய பயணம்: கடுமையான பின் விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் அமெரிக்கா கடும் எச்சரிக்கை

BarackObama

ஜனவரி 19, ஒபாமாவின் இந்திய பயணத்தின்போது தீவிரவாத தாக்குதல் நடந்து, அதன் பின்னணியில் பாகிஸ்தானின் கை இருப்பது தெரிய வந்தால் கடுமையான பின் விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய குடியரசு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம்தேதி புதுடெல்லி வருகிறார்.

3 நாள் அரசு முறைப் பயணமாக இங்கு ஒபாமா வரும் வேளையில் இந்தியாவுக்குள் எந்நேரமும் ஊடுருவும் நோக்கத்தில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைக்கப்பட்டுள்ள 36 முகாம்களில் சுமார் 200 தீவிரவாதிகள் தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.

தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் சுமார் 15 பயிற்சி முகாம்கள் அப்பகுதியில் முனைப்பாக இயங்கி வருகின்றன என்ற அதிர்ச்சி தகவல்களை இந்திய ராணுவத்தின் உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, டெல்லியில் வரும் 26-ம்தேதி குடியரசு தின விழா நடைபெறும் இடத்தைச் சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வாஷிங்டனில் இருந்து டெல்லி வந்துள்ள அமெரிக்க ரகசியப் பிரிவு போலீசாரும், ராணுவ உளவுத்துறை அதிகாரிகளும் கண்களில் விளக்கெண்ணெய் இட்டுக்கொள்ளாத குறையாக ஒபாமாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி துருவித்துருவி கண்காணித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் ஒபாமாவுக்கான பாதுகாப்பை கவனித்து வரும் சிறப்பு படையினர் நீங்கலாக டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர் என சுமார் ஒரு லட்சம் பேர் குடியரசு தின விழா பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில், ஒபாமா டெல்லி வரும்போது இந்திய எல்லைப் பகுதியின் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருப்பதையும், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை அவர்கள் நிகழ்த்தாமல் இருப்பதையும் பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என அமெரிக்க அரசின் உயரதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அவரது வருகையின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் கடும் பின் விளவுகளை பாகிஸ்தான் சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் முக்கிய பிரமுகர்கள் இந்தியாவுக்கு வரும் போதெல்லாம் பாகிஸ்தான் செய்துவந்த சில ‘சில்மிஷங்களை’ பட்டியலிட்டு அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு அந்நாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் இந்திய பயணத்தின்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் 36 சீக்கியர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதை தற்போது சுட்டிக் காட்டியுள்ள அமெரிக்க அரசு இதைப் போன்ற வாலாட்டும் வேலையை மீண்டும் செய்ய பாகிஸ்தான் முயற்சிக்க கூடாது.

ஒபாமாவின் இந்திய பயணத்தின்போது அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்து, அதன் பின்னணியில் பாகிஸ்தானின் கை இருப்பது தெரிய வந்தால் கடுமையான பின் விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.