ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் மற்றும் உடல்களும் கடலில் மிதக்கின்றன

ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் மற்றும் உடல்களும் கடலில் மிதக்கின்றன

airq

டிசம்பர் 30, மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது உறுதியாகியுள்ளது. அந்த விமானத்தின் பாகங்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் கடலில் மிதப்பதாக இந்தோனேசிய விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறன்று 162 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் மாயமானது. மோசமான வானிலை காரணமாக பாதை மாறிச் சென்ற விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என இந்தோனேசியா தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக மாயமான விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது. முதலில் ஜாவா கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சில பொருட்கள் மிதப்பதாகக் கூறப்பட்டது. அவை விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்களாக இருக்கும் எனச் சந்தேகிக்கப் பட்டது.

இந்நிலையில், இன்று ஜாவா கடற்பகுதியில் புகை மண்டலம் தெரிவதாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இந்தோனேசியாவின் களிமன்தன் தீவுக்கு அருகே விமானத்தின் சிதறிய பாகங்கள் மிதப்பதாக அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில் ஏராளமான உடல்களும் மிதப்பதாக கூறப்பட்டுள்ளது.

இத்தகவலைக் கேள்விப் பட்டு விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர்.