டிசம்பர் 18, மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் வகையில் அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர். இந்த ராக்கெட்டின் மேல்பகுதியில், 3 மனிதர்களை பத்திரமாக விண்ணுக்கு அனுப்பி மீண்டும், பூமிக்கு அழைத்து வரும் வகையில் ‘கப் கேக்’ வடிவிலான ஒரு அறை போன்ற அமைப்பை (விண்கலம்) உருவாக்கி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு இதை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கூறியதாவது:-
மனிதனை விண்வெளிக்கு சோதனை முறையில் அனுப்புவதற்கான ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ஆயத்த பணிகள் நிறைவடைந்துள்ளன. திட்டமிட்டபடி கவுண்ட்டவுனை முடித்துக் கொண்டு இன்று காலை 9.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. விண்கலத்தை விண்ணில் அனுப்புவதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
ராக்கெட் விண்ணில் 125 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுவிட்டு, அடுத்த 20-வது நிமிடத்தில் வங்காளவிரிகுடா கடல் பகுதியில் பத்திரமாக பாராசூட் மூலம் விழும் வகையில் வடிவமைத்துள்ளோம். கடலில் இருந்து விண்கலத்தை மீட்டு மீண்டும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திடம் வழங்க, இந்திய கடற்படையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விண்கலத்தை ராக்கெட்டில் அனுப்புவதின் நோக்கமே, மனிதனை ராக்கெட்டில் வைத்து அனுப்புவதற்கான தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்வதற்காக தான். ஆனால் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான முறையான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.
இந்தியாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டில் அதிகபட்ச எடைகொண்ட ராக்கெட் என்ற பெருமையை ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் பெறுகிறது.