டிசம்பர் 16, சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகளுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமாதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்கிறார்கள். ஆனால் அதற்கேற்ப 2 சமாதிகளிலும் போதிய பாதுகாப்பு வசதி இல்லை.
முன்னாள் ராணுவத்தினர் தான், இந்த சமாதிகளில் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் வந்துள்ளதால், இந்த 2 சமாதிகளுக்கும், டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு உள்ளது போன்ற உயர்பாதுகாப்பு வசதிகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்கட்டமாக ரூ.9 லட்சம் செலவில் இரு சமாதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக இந்த 2 சமாதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட அரசு ஆணையிட்டுள்ளது. தினமும் ஒரு ஷிப்டுக்கு 10 போலீசார் வீதம் 3 ஷிப்டுகளாக 30 போலீசார் இந்த பணியில் ஈடுபடுவார்கள். போலீசாருடன் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிக்கு தலைமை தாங்குவார். இவர்களை மேற்பார்வையிட, ஒரு இன்ஸ்பெக்டரும் நியமிக்கப்படுகிறார். ஓரிரு நாட்களில் முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து பாதுகாப்பு பொறுப்பை போலீசார் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.