டிசம்பர் 12, கடந்த மார்ச் 8-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட சில மணிநேரங்களில் காணாமல் போன MH370 விமானம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், மலேசியன் ஏர்லைன்ஸ் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை பெற பயணிகளின் உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
சம்பவத்தன்று காணாமல் போன MH370 விமானத்தில் பயணித்த தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் பத்திரமாக வந்து சேருவார்கள் என பயணிகளின் உறவினர்கள் நம்புகின்றனர் என போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய் தெரிவித்தார்.
“இது வரை நாங்கள் பயணிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு AS50,000 வழங்கியுள்ளோம். துரதிஷ்டவசமாக, காணாமல் போன விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்காததால் அதிகமான பயணிகளின் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு இருப்பதாகக் கருதுகின்றனர்” என அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக இன்று மேலவையில், MH370 விமானப் பயணிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து செனட்டர் டத்தோ ராஜ ரூபியா ராஜ அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 8-ஆம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நள்ளிரவு 12.41க்குக் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட MH370 விமானம் 1 மணி நேரம் கழித்து மாயமானது. சம்பவத்தின் போது அவ்விமானத்தில் 227 பயணிகளும் 12 விமானப் பயணிகளும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.