நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

MULLAPERIYAR_955631f

டிசம்பர் 11, நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதையடுத்து முல்லை பெரியாறு அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக வறண்ட காலநிலையே இருந்துவந்த நிலையில் நேற்று முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. 142 அடி வரை உயர்ந்த முல்லைபெரியாறு அணை படிப்படியாக குறைந்து 132 அடியை நெருங்கியது. மழை இல்லாத காரணத்தாலும், அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது.

அதேபோல் வைகை அணையும் வேகமாக நிரம்பி இந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. நேற்று முதல் 2000 கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டதால் நேற்று காலை நிலவரப்படி 36.8 அடி நீர்மட்டத்தை வைகை அணை அடைந்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 134 அடியாக உள்ளது. நீர்வரத்து 3584 கனஅடி. திறப்பு 1671 கனஅடி, இருப்பு 5633 மி.கனஅடி.

வைகை அணை நீர்மட்டம் 36.22 அடியாக உள்ளது. நீர்வரத்து 1801 கனஅடி. திறப்பு 2360 கனஅடி, இருப்பு 680 மி.கனஅடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது. நீர்வரத்து 45 கனஅடி. திறப்பு 90 கனஅடி, இருப்பு 264.84 மி.கனஅடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. நீர்வரத்து 25 கனஅடி. திறப்பு 25 கனஅடி, இருப்பு 100 மி.கனஅடி.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் பகல் பொழுதில் மிதமான மழையும், மாலையில் சாரல் மழையும் பெய்தது. ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. இதனால் வாடிய நிலையில் இருந்த மானாவாரி பயிர்களுக்கு ஊட்டம் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரியாறு 12.4, தேக்கடி 22.4, வைகை அணை 12.6, கூடலூர் 2, உத்தமபாளையம் 4, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 17 மி.மீ மழையளவு பதிவானது.