பிலிப்பைன்ஸில் ஹகுபிட் புயல் தாக்குதலில் 21 பேர் பலி

பிலிப்பைன்ஸில் ஹகுபிட் புயல் தாக்குதலில் 21 பேர் பலி

cyclone-may-2008

டிசம்பர் 9, பிலிப்பைன்சை தாக்கிய ஹகுபிட் புயலுக்கு 21 பேர் பலியானார்கள். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ராணுவம் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த வாரம் பசிபிக் கடலில் புயல் சின்னம் ஒன்று உருவானது. இது தீவிரமடைந்து பெரும் புயலாக மாறியபோது அதற்கு ‘ஹகுபிட்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் தீவிரமடைந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் சமர் தீவை நோக்கி வந்தது.கடந்த ஆண்டு பெரும் சேதத்தை உருவாக்கிய சூப்பர் புயல் போல இதுவும் வலுவடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பிலிப்பைன்சின் 3-வது மிகப் பெரிய தீவான சமரில் இருந்து 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தக்லோபான் என்ற பகுதியில் மட்டும் 50 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சமர் தீவின் கிழக்கு பகுதியை ஹகுபிட் நேற்று முன்தினம் இரவு கடுமையாக தாக்கியது. புயலுக்கு முன்பும் பின்பும் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புயல் தாக்கியபோது மணிக்கு 165 முதல் 190 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. இதனால் ஏராளமான மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. குடிசை வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சமர் தீவின் பெரும்பாலான பகுதிகளில் சாலை இணைப்பு அடியோடு துண்டிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மின்சாரமும், குடிநீரும் இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ராணுவ விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்களும், குடிநீர் கேன்களும் போடப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.ஹகுபிட் புயல் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ரூ.425 கோடி மதிப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு சமர் பகுதியில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 16 பேர் பரோன்கான் என்னும் நகரைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஹகுபிட் புயல் தாக்கியதில் 21 பேர் பலியானதை பிலிப்பைன்சின் தேசிய செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்து உள்ளது.