ஆந்திர புயல் நிவாரணத்துக்கு கலை நிகழ்ச்சி ரூ.11 கோடி நிதி திரட்டிய நடிகர்–நடிகைகள்

ஆந்திர புயல் நிவாரணத்துக்கு கலை நிகழ்ச்சி ரூ.11 கோடி நிதி திரட்டிய நடிகர்–நடிகைகள்

TCA-Hudhud-Relief-Fund-Pres

டிசம்பர் 2, ஆந்திராவில் ‘ஹூட் ஹூட்‘ புயல் தாக்கியதில் விசாகப்பட்டினம் உள்பட 4 மாவட்டங்கள் பெரும் சேதத்துக்குள்ளானது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்ட தெலுங்கு திரையுலகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

‘‘மேமூ சையித்தம்’’ என்ற பெயரிலான இந்த கலை நிகழ்ச்சி நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் தெலுங்கு திரையுலக நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜூன், ரவி தேஜா, நடிகைகள் சுமலதா, ஜீவிதா, ஜெயசுதா, ஜெயப்பிரதா, ஸ்ரேயா, ரகுல் பிரிந்சிங் மற்றும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் என அனைத்து பிரபலங்களும் பங்கேற்றனர்.

நட்சத்திரங்கள் பங்கேற்ற கபடி, கிரிக்கெட், அந்தராக்சரி, நடனம், பாடல் போன்ற பல நிகழ்ச்சிகள் நடந்தது. மொத்தம் 12 மணி நேரம் நிகழ்ச்சி நடைபெற்றது. வந்தே மாதரம் பாடலுக்கு நடிகை ஸ்ரேயா நடனமாடினார். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் நடிகை இஷா சாவ்லா நடனமாடினார்.

போல்லா விஜய பாஸ்கர் ரெட்டி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது. நடிகர் என்.டி.ஆர். தலைமையில் ஒரு அணியும், நாகார்ஜுனா தலைமையில் இன்னொரு அணியும் மோதியதில் நாகார்ஜுனா அணி வெற்றி பெற்றது.

இதே போல் வெங்கடேசன்–ராம்சரண் அணி மோதியதில் வெங்கடேசன் அணி வெற்றி பெற்றது. புயலில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றியவரை ‘ரியல் ஹீரோ’ என்று நாகார்ஜுனா அறிமுகப்படுத்தினார். மாலையில் அண்ண பூர்ணா ஸ்டேடியத்தில் நட்சத்திர நிகழ்ச்சியில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நடிகர்–நடிகைகள் வசூலித்த ரூ.11.51 கோடியை சந்திரபாபு நாயுடுவிடம் 3 பிரபல நடிகர்கள் இணைந்து வழங்கினார்கள். இந்த தொகையை பெற்றக் கொண்டு நடிகர்களிடமே திருப்பி கொடுத்த சந்திரபாபு நாயுடு, ‘‘இதே அளவு தொகையை அரசு சார்பில் உங்களுக்கு வழங்குகிறோம்.

அந்த தொகை மூலம் நீங்கள் விசாகப்பட்டினத்தில் ஒரு சில கிராமத்தை தத்து எடுத்து அதனை மாதிரி கிராமமாக மாற்றி தாருங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார். இதனை நடிகர்–நடிகைகள் ஏற்றுக் கொண்டனர்.

இந்த கலைநிகழ்ச்சியில் தென் இந்திய நடிகர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தமிழ், மலையாள நடிகர்கள் யாரும் பங்கேற்க வில்லை. அதே நேரத்தில் தமிழ் திரைப்பட சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டதாக மேடையில் அறிவிக்கப்பட்டது.

நடிகை ராதிகா ரூ.2½ லட்சமும், சரத்குமார் ரூ.2½ லட்சமும் நிதி வழங்கினர். நடிகர் விஜய்யும் நிவாரண நிதி வழங்கினார். பின்னணி பாடகி சுசீலா ரூ.1 லட்சம் வழங்கினார்.