டிசம்பர் 1, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் (எச்பி.சிஎல்) ஆகியவை 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. சர்வதேச சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் விலை மாற்றம் செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்ததால் பெட்ரோல் விலை குறைப்புக்கு சாதகமாக அமைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 6 முறை பெட்ரோல் விலை மொத்தம் ரூ.9.36 குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 7வது முறையாக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் டீசல் விலை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த அக்டோபர் 19ம் தேதி லிட்டருக்கு ரூ.3.37 குறைக்கப்பட்டது.
அதன்பிறகு 3வது முறையாக தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 13ம் தேதியன்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.2.41 வீதம் குறைக்கப்பட்டது. அதே நாளில், டீசல் விலையிலும் லிட்டருக்கு ரூ.2.25 குறைக்கப்பட்டது. இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 91 காசுகளும், டீசல் 84 காசுகளும் குறைக்கப்பட்டன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. வாட் வரிகளுடன் சேர்த்து அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப விலை வேறுபடும். இதன்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 96 காசு குறைந்து ரூ.66.05 ஆகவும், டெல்லியில் லிட்டருக்கு 91 காசுகள் குறைந்து 63.33 ஆக இருக்கும். இதுபோல் டீசல் விலை சென்னையில் லிட்டருக்கு 91 காசு குறைந்து 55.93 ஆகவும், டெல்லியில் 84 காசுகள் குறைந்து 52.51 ஆகவும் இருக்கும்.