டிசம்பர் 1, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டு மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைதிறக்கப்பட்டு உள்ளதால் இருமுடி கட்டிய அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
முதல் நாளில் இருந்தே சபரிமலையில் கட்டுக்கடங்காத அளவுக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை தர தொடங்கி உள்ளனர். நடைதிறந்த 14 நாட்களில் இதுவரை வந்த பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தேவசம்போர்டு தெரிவித்து உள்ளது.
பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசாரும், தேவசம்போர்டு ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பெரும் சிரமப்பட்டு பக்தர்களை வரிசையில் சன்னிதானத்துக்கு அனுப்பி வருகிறார்கள். சபரிமலையில் பலத்த மழை பெய்த போதும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் சபரிமலை கோவிலில் கடந்த 14 நாட்களில் மொத்தம் ரூ.44 கோடியே 30 லட்சம் வருமானம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு 14 நாட்களில் ரூ.35 கோடியே 76 லட்சம் வருமானம் கிடைத்து இருந்தது.
சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை– அப்பம் விற்பனையும் இந்த ஆண்டு அமோகமாக உள்ளது. இதுவரை ரூ.18 கோடியே 17 லட்சத்திற்கு அரவணையும், ரூ.3 கோடியே 8 லட்சத்திற்கு அப்பமும் விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆண்டு 14 நாட்களில் ரூ.13.21 கோடிக்கு அரவணையும், ரூ.2.88 கோடிக்கு அப்பமும் விற்பனையாகி இருந்தது. மேலும் காணிக்கையாக ரூ.16 கோடியே 48 லட்சம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.12 கோடியே 88 லட்சம் காணிக்கை கிடைத்திருந்தது.