நவம்பர் 28, மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பிரபல உரைகள் குறிப்பாக மலாய்க்காரர்கள் மற்றும் “பூமிபுத்ரா” ஆகிய விஷயங்களைத் தொட்டு பேசிய உரைகள் யாவும் உள்ளடங்கிய புத்தகம் ஒன்று வெளியீடு கண்டுள்ளது.
“11 பிடாத்தோ தெர்பிலே நஜிப் ரசாக்” என்ற தலைப்பிலான இப்புத்தகம் 300 பக்கங்களைக் கொண்டதாகும். பிரதமர் நஜிப்பின் சிறந்த 11 உரைகளைத் தேர்ந்தெடுத்து வடிவமைக்கப்பட்ட இந்த புத்தகத்தை, ‘ஃபௌன்டேஷன் ஓப் ரிசர்ஜ் என் டிரான்ஸ்ஃபோர்மேஷன்’ எனும் நிறுவனம் பிரதமரின் அலுவலக நிர்வாகத்துடன் இணைந்து வெளியிட்டது.
பிரதமர் நஜிப்பின் சிறந்த மற்றும் முக்கியமான உரைகளை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டும் நோக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த புத்தகம் புத்ரா உலக வர்தக மையத்தில் அம்னோ மாநாட்டில் கலந்துக் கொண்டிருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என இந்நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ வீரா டாக்டர் கையிரில் அன்னாஸ் ஜூசோ தெரிவித்தார்.
இப்புத்தகத்தின் வெளியீடு பிரதமர் நஜிப் மற்றும் துணை பிரதமர் தான் ஶ்ரீ முஹிடின் யாசின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. குறிப்பிட்ட சில பல்கலைக்கழக மாணவர்களுக்காக இப்புத்தகத்தின் சில பதிவுகள் பிரதமரால் கையெழுத்திடப்பட்டது.