இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலை அறிவித்தார் ராஜபக்சே

இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலை அறிவித்தார் ராஜபக்சே

mahinda-rajapaksa1

நவம்பர் 21, இலங்கையில் 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை அறிவித்துள்ளார் அதிபர் ராஜபக்சே.
இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகிந்தா ராஜபக்சே அதிபரானார். கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஒழித்த பின், 2010ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி பெற்று 2வது முறையாக அதிபர் ஆனார். இலங்கையில் அதிபராக பதவி ஏற்பவர்கள் 6 ஆண்டு காலம் பதவி வகிப்பர். அதன்படி அதிபர் ராஜபக்சேவின் பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை அரசு டி.வி.யில் அதிபர் ராஜபக்சே நேற்று அளித்த பேட்டியில், ‘‘நான் ஒரு ரகசியத்தை அறிவிக்கிறேன். 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையில், தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளேன். அதுதான் ஜனநாயகம்’’ என குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தற்போது 69 வயதாகிறது. அதிபர் பதவிக்காலத்தில் 4 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டாலே, அடுத்த தேர்தலை அதிபர் அறிவிக்கலாம் என்பது இலங்கை அரசியலமைப்பின் சட்டம். அதன்படி இந்த அறிவிப்பை ராஜபக்சே வெளியிட்டுள்ளார். இது குறித்து இலங்கை தேர்தல் ஆணையர் மகிந்தா தேசபிரியா கூறுகையில், ‘‘அதிபரின் தேர்தல் அறிவிப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர் ந்து வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் தொடரும்’’ என்றார். இலங்கை அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. இலங்கை மக்களிடையே அதிபர் ராஜபக்சேவுக்கு தற்போது செல்வாக்கு குறைந்துள்ளது. இலங்கையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்கிய கட்சியான தேசிய பாரம்பரியக் கட்சி நேற்று அறிவித்துள்ளது. நாட்டில் 70 சதவீதம் உள்ள புத்த மதத்தினரின் மதகுருக்களின் கட்சி இதுவாகும்.