நவம்பர் 11, மலேசிய நாட்டின் பினாங்கு மாநில சட்டமன்றம், பினாங்கு நகரில் அமைந்துள்ளது. இந்த சட்டமன்றத்திற்கு நேற்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அப்போது சட்டமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
பார்வையாளர்கள் வரிசையில் வைகோ அமரச் சென்றபோது, சட்டமன்ற அவைத் தலைவர் லாசுங் கியாங், நமது சட்டமன்றத்திற்கு இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான தலைவரான வைகோ வந்திருக்கிறார். நமது சட்டமன்றம் எப்படி நடைபெறுகிறது என்பதை அறிவதற்காக வந்துள்ளார். அவரை நானும் இந்தச் சட்டமன்றமும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார். அதற்கு பிறகு வைகோ, அவைத் தலைவருக்கும், சபையில் இருந்தவர்களுக்கும் வணக்கம் தெரிவித்தார்.
சட்டசபை நண்பகல் இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்டவுடன், அவைத் தலைவரின் அறைக்கு துணை முதல்வர் ராமசாமி வைகோவை அழைத்துச் சென்றார். சட்டமன்ற அவைத் தலைவர் வைகோவை வரவேற்று நினைவுப் பரிசு வழங்கினார்.