பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: சாவு எண்ணிக்கை 61 ஆக உயர்வு

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: சாவு எண்ணிக்கை 61 ஆக உயர்வு

src.adapt.480.low

நவம்பர் 4, பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே வாகா எல்லை உள்ளது. இந்த எல்லைக்கு உட்பட்ட பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தினமும் மாலை 6 மணி அளவில் கொடி இறக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் கொடி இறக்கம் நடந்தது.

இதனைப் பார்ப்பதற்காக 100-க்கும் அதிகமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். கொடி இறக்கம் செய்யும் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அவர்கள் அங்கிருந்த புறப்படுவதற்கு ஆயத்தமானார்கள்.

சரியாக 6 மணி 3 நிமிட அளவில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடக்கும் சாலையை நோக்கி ஓடி வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் அங்கிருந்த முதன்மை நுழைவு வாயில் மீது மோதி, தனது உடலில் மறைத்து கட்டிக்கொண்டு வந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான்.

இதில் அந்த பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி 10 பெண்கள், 8 குழந்தைகள், 3 ராணுவ வீரர்கள் உள்பட 55 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினரும், ராணுவத்தினரும் விரைந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு, லாகூர் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

எனினும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேலும் 6 பேர் நேற்று உயிரிழந்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, இந்த சம்பவத்தில் பலியான 43 பேருடைய உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், 18 உடல்களை அடையாளம் காண்பது குறித்து தேசிய பதிவு புள்ளிவிவர ஆணையத்தின் உதவி நாடப்பட்டு உள்ளது.

இதனிடையே தற்கொலை படை தீவிரவாதியின் தாக்குதல் தொடர்பாக வாகா எல்லை பகுதியில் சந்தேகத்தின் பேரில் 20 பேரை பாகிஸ்தான் போலீசார் நேற்று கைது செய்தனர்.