அண்ணாமலை பல்கலை.யில் கிடைத்த ரூ.15 லட்சம் பணம் போலீசில் ஒப்படைப்பு

அண்ணாமலை பல்கலை.யில் கிடைத்த ரூ.15 லட்சம் பணம் போலீசில் ஒப்படைப்பு

Annamalai-University

நவம்பர் 4, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் கிடைத்த ரூ.15 லட்சம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழகத்திற்கான தேசிய தரநிர்ணய குழுவினர் அடுத்த வாரம் ஆய்வு செய்ய உள்ளதால் அனைத்து துறைகளிலும் தூய்மை படுத்தும் பணி நடந்து வந்தது. பொறியியல் கல்லூரியில் உள்ள கம்யூட்டர் பொறியியல்துறை தலைவர் அலுவலகத்தில் பீரோக்களை ஊழியர்கள் சுத்தப்படுத்தும் போது ஒரு பீரோவில் பேப்பர் சுற்றப்பட்டு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை பொறியியல் கல்லூரி கம்யூட்டர் பொறியியல்துறை தலைவர் பேராசிரியர் ராமலிங்கம், ஊழியர்கள் செல்வம், முருகன், நாகக்குமார் ஆகியோர் ஒரு பையுடன் அண்ணாமலைநகர் காவல்நிலையம் வந்து பீரோவில் கிடைத்த பணம் பற்றி தகவல் தெரிவித்து பணத்தை ஒப்படைத்தனர். அதில் 100 ரூபாய் கட்டு 15ம், 500 ரூபாய் கட்டுகள் 25ம், 1000 ரூபாய் கட்டு ஒன்றும் மொத்தமாக ரூ.15 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது. பொறியியல் கல்லூரியில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.