நவம்பர் 3, ஈராக்கில் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் எதிர்தரப்பினரை கொன்று குவித்து வருகிறார்கள். அங்குள்ள அன்பார் பகுதியில் 40 ஆயிரம் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதிகளை கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்கிருந்த ஏராளமானவர்களை கடத்தி சென்றனர். அவர்களில் 50 பேரை 2 நாட்களுக்கு முன்பு வரிசையாக நிற்க வைத்து சுட்டுக்கொன்றனர்.
இப்போது மேலும் 272 பேரை அவர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். இவர்களில் 10 பெண்கள் மற்றும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 322 பேரை அவர்கள் கொன்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோரின் பிணம் அங்குள்ள ஏரி ஒன்றில் மிதந்தது.
இதுதொடர்பாக பழங்குடியின தலைவர் ஷேக் நையின் கூறும்போது, ஈராக் அரசு எங்களை காப்பாற்ற தவறிவிட்டது. தீவிரவாதிகளை எதிர்த்து போராட நாங்கள் அரசிடம் ஆயுதம் கேட்டோம். ஆனால் அரசு தர மறுத்துவிட்டது. இதனால் எங்கள் மக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்னும் பல நூறு பேர் தீவிரவாதிகளிடம் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. சர்வதேச சமூகம் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.