தமிழகம் முழுவதும் மீண்டும் பலத்தமழை

தமிழகம் முழுவதும் மீண்டும் பலத்தமழை

Rain01

நவம்பர் 3, தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முன்பு பலத்த மழை பெய்தது. தீபாவளிக்கு பிறகு மழை பெய்யவில்லை. ஆனாலும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. இன்று அதிகாலை சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இன்று சாலை 8 மணிக்கும் சென்னையில் ஆங்காங்கே மழை பெய்தது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 17–ந்தேதி முதல் பலத்த மழை கொட்டி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மேலணையில் அதிக பட்சமாக 6 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சமயபுரத்தில் 5மி.மீ., திருச்சி டவுனில் 2.4 மி. மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான தூறல் நீடிக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில் மழை குறைந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலும் லேசான தூறலுடன் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

கரூர் மாவட்டத்திலும் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாகவே தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவே கொடைக்கானல் நகரில் உள்ள பழைய மற்றும் புதிய அணைகள் நிரம்பி விட்டன. மேலும் பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் அதிகளவு வருவதால் பழனி நகரில் உள்ள பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தொடர் மழையின் காரணமாக கொடைக்கானலில் வரலாறு காணாத அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. 8.45 மணிக்கு பெய்ய தொடங்கிய கனமழை 1 மணிநேரத்திற்கு மேலாக பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

கொடைக்கானல் நகரில் ஏற்கனவே ஏரி, அணைகள், குளங்கள் நிரம்பி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

பலத்த மழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, பியர்சோழா, தேவதை அருவி போன்ற நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.திண்டுக்கல் நகரிலும் இன்று காலை முதலே சாரல் மழையும், பின்னர் லேசான மழையும் பெய்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு சத்தியமங்கலம், அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் மழை பெய்தது. பர்கூர் அடுத்த தேவர்மலையை சேர்ந்த குமார் (வயது 25) என்ற கேபிள் ஆப்ரேட்டர் மழையால் மின்சாரம் தாக்கி பலியானார்.