வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் இன்று மழை பெய்யும்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் இன்று மழை பெய்யும்

Rain01

நவம்பர் 1, தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தருகிற வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கி பெய்து வருகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் மட்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாறாக சென்னையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்யவில்லை.

இலங்கை மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென் வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (சனிக்கிழமை) மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் உள்மாவட்டங்களை பொறுத்த வரையில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.