முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

parliament

16வது லோக்சபாவின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடரில் ஜூலை 8ம் தேதி(நாளை) ரயில்வே பட்ஜெட்டும், ஜூலை 10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. மொத்தம் 168 மணிநேரம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடர் 28 அமர்வுகளை கொண்டது எனவும், பல்வேறு அமைச்சகங்களின் கோரிக்கைகள் குறித்து ஜூலை 31ம் தேதி இருஅவைகளிலும் விவாதிக்கப்படும் எனவும் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். மேலும் எந்த விவகாரம் குறித்தும் முழுமையான விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவை உறுப்பினர்கள் பேசுவதை அவையின் அனைத்து மூலைகளிலும் அமர்ந்துள்ள உறுப்பினர்களும் பார்ப்பதற்கு வசதியாக, அவர்களின் பேச்சு பெரிய திரையில் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

விலைவாசி தொடர்பாக விவகாரத்தை அவையில் எழுப்ப திட்டமிட்டிருப்பது குறித்த தங்களின் நிலைப்பாட்டை, சபாநாயகர் ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சி கூட்டத்தின் போதே எதிர்க்கட்சிகள் தெளிவுபடுத்தி உள்ளன. விலைவாசி மட்டுமின்றி முன்னாள் சோலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்தின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமன விவகாரம், மத்திய அமைச்சர் நிகல்சந்த் மேக்வால் மீதான பாலியல் வழக்கு உள்ளிட்ட விவகாரங்களையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.