அக்டோபர், 16 அடுத்த தமிழக சட்டசபை தேர்தல் வரை ஜாதிவாரியாக சுழற்சி முறையில் முதல்வர் பதவி அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் பதவியை இழக்க நேரிட்டது. இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகி உள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பதவியை சுழறி முயற்சியில் பங்கிட்டுக் கொண்டு அதிமுகவை வலுப்படுத்துகிற வியூகத்தை ஜெயலலிதா வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் தென் மண்டலத்தைச் சேர்ந்தவர். 6 மாத காலம் இந்த பொறுப்பை வகிப்பதன் மூலம் தென் மாவட்டத்தில் அனுதாபத்தையும் செல்வாக்கையும் வளர்க்க முடியுமாம்.
அதேபோல் அடுத்த 6 மாத காலத்துக்கு மேற்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவியாம். அதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாதங்களுக்கு வட மாவட்டங்களை இலக்கு வைத்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் பின்னர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் முதல்வராக்குவதன் மூலம் தமிழகத்தின் முக்கிய சமூகத்தினர் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் அனுதாபத்தையும் செல்வாக்கையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்பதுதான்.