அக்டோபர், 16 நியூமராலஜிப்படி பெயரை ‘அனுஷா’ என்று மாற்றிக்கொண்டார் சுனேனா. ஆனால், அதற்குப் பிறகு ஒரு படம் கூட கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் ‘சுனேனா’ ஆகிவிட்டார். ‘வன்மம்’ படத்தின் ஆடியோ விழாவுக்காக சென்னை வந்திருந்தவரிடம் பேசினோம்.
ஸ்ரீகாந்த் ஜோடியாக ‘நம்பியார்’, கிருஷ்ணா ஜோடியாக ‘வன்மம்’ படங்களில் நடிக்கிறேன். கோலிவுட்டில் நான் விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற வெறியில், நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன்.
‘வன்மம்’ படத்தில் நாகர்கோவில் வட்டார வழக்கு பேசி நடித்தீர்களாமே?
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும், கிருஷ்ணாவும் போட்டி போட்டு நடிக்கும்போது, நானும் என் பங்குக்கு ஏதாவது வித்தியாசத்தைக் காட்டி நடிக்க வேண்டும் அல்லவா? ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குனர்கள் எனக்குப் பயிற்சி அளித்தார்கள். வழக்கமாகப் பேசுவதைவிட, அடித்தொண்டையில் இருந்து ஒவ்வொரு வார்த்தையையும் பேச வேண்டும். முதலில் கஷ்டமாக இருந்தது. பிறகு சுலபமாகி விட்டது.
இவ்வளவு படங்களில் நடித்தும்கூட, உங்களால் முன்னணி நடிகை என்ற இடத்தைப் பிடிக்க முடியவில்லையே?
அது உண்மைதான். ஆனால், அதற்காக நான் மூலையில் போய் உட்கார்ந்து, வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்க முடியுமா? ஹீரோயின்களுக்கு மத்தியில் நடக்கும் ‘நம்பர் ஒன்’ போட்டியில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அடுத்த மாதமே வேறொரு நடிகை நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருப்பார். ஏற்கனவே கொண்டாடப்பட்ட நடிகையை எல்லோரும் மறந்துவிடுவார்கள்.
நிறைய படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறீர்களே. என்ன காரணம்?
சினிமாவில் நடிக்க வந்த புதிதில், ஓரிரு படங்களில் அப்படி நான் நடித்திருக்கலாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பிறகு, ‘நான் கிளாமராக நடிக்க மாட்டேன்’ என்று அடம்பிடித்தால், ‘இந்த பொண்ணு பந்தா பண்ணுது’ என்று என்னைப் பற்றி தப்பாகப் பேசுவார்கள். நல்ல பெயர் வாங்குகிறேனோ இல்லையோ, கெட்ட பெயர் வாங்கக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.
‘டர்ட்டி பிக்சர்’, ‘குயின்’ படங்களில் நடித்த வித்யா பாலன், கங்கனா ரனாவத் மாதிரி நடிப்பீர்களா?
நடிக்க வந்த பிறகு, எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். இந்தி ‘டர்ட்டி பிக்சர்’, ‘குயின்’ மாதிரி படங்களை உருவாக்கும் மனப்பக்குவம் கோலிவுட்டுக்கும் வந்தால், என்னைப் போன்ற நடிப்பில் அதிக ஆர்வம் உள்ள நடிகைகளுக்கு நன்றாக இருக்கும். அந்த கேரக்டர்களில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தால், அதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறென்ன இருக்க முடியும்?