வியட்நாமின் வடக்கே உள்ள ஹை போங் துறைமுகத்தில் அமைந்துள்ள கப்பல்கட்டும் நிறுவனத்துக்கு சொந்தமாக, ‘எம்.டி. சன்ரைஸ் 689’ என்ற கப்பல் உள்ளது. இந்த கப்பல் கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து 5,200 டன் எண்ணெயை ஏற்றிக்கொண்டு வியட்நாமின் குவாங் ட்ரை துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் 18 ஊழியர்கள் பணியில் இருந்தனர். இடையில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த கப்பலை வழிமறித்த கடற்கொள்ளையர்கள், கப்பலில் இருந்த ஊழியர்களை தாக்கியதுடன் கப்பலின் தகவல் தொடர்பு சாதனங்களையும் சேதப்படுத்தினர். பின்னர் அந்த கப்பலை கொள்ளையர்கள் கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கப்பல் நிறுவனம், கடத்தப்பட்ட கப்பலை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இந்தநிலையில் கப்பலில் இருந்த எண்ணெயில் 3-ல் ஒருபங்கை கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள், நேற்று கப்பலையும், அதன் ஊழியர்களையும் விடுவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த கப்பல் வியட்நாமின் தெற்கு பு குவோக் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது. தெற்கு ஆசியாவில் மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் இடையே ஓடும் மலாக்கா ஜலசந்தி பகுதியில் இந்த ஆண்டு கடற்கொள்ளை அதிகரித்து உள்ளதாக கப்பல் நிறுவனங்கள் புகார் கூறி வருகின்றன. மிக முக்கிய கடல்வழியான இந்த பகுதி வழியாக ஏராளமான கப்பல்கள் சென்றுவருவது குறிப்பிடத்தக்கது.