ஒரு பெண்ணுடன் வன்புணர்வு கொள்ள முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய தூதரக அதிகாரியை நியு சிலாந்துக்கு “இயன்ற விரைவில் திருப்பி அனுப்ப” ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
“அவருக்கு மருத்துவ சோதனைகள் முடியும் தருவாயில் உள்ளன. அவருக்கு உதவ வெளியுறவு அமைச்சு ஒரு வழக்குரைஞரைத் தேடிக் கொண்டிருக்கிறது”, என்று தற்காப்பு அமைச்சு வட்டாரமொன்று தெரிவித்தது.
முகம்மட் ரிசால்மன் இஸ்மாயில் 21-வயது பெண் ஒருவரை அவரது வீடுவரை பின்தொடர்ந்து சென்று அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை விசாரணைக்கு வெல்லிங்டனுக்குத் அனுப்பி வைக்குமாறு நியு சிலாந்து தலைவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
திருப்பி அனுப்புவதை ரமலான் முடியும்வரை தாமதப்படுத்துமாறு குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் கோரிக்கை விடுத்திருப்பதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.