எஸ்.பி.எம் மாதிரி தேர்வு முடிவுகளைப் பயன்படுத்தி தனியார் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் முறையை கல்வியமைச்சகம் தடை செய்திருப்பது ‘திடீர்’ முடிவு என ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் சிவராஜ் சந்திரன் தெரிவித்துள்ளார்.
‘இவ்விவகாரத்தில் கல்வியமைச்சகம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை முன்னறிவிப்பு வழங்கியிருக்க வேண்டும், என சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.
எஸ்.பி.எம் தேர்வுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் பட்சத்தில் கல்வியமைச்சகம் எடுத்திருக்கும் முடிவு எதிர்பாராது. இது விரைவில் சோதனையை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும் என சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.
எஸ்.பி.எம் மாதிரி சோதனை முடிவுகளைத் தனியார் உயர்க்கல்விக்கூட நுழைவிற்குப் பயன்படுத்த அனுமதி மறுப்பது குறித்து கல்வியமைச்சகம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும். மேலும், மாதிரிச் சோதனைகளின் முடிவுகளைப் பயன்படுத்தி தனியார் உயர்க்கல்விக்கூடங்களில் பதிவது மூலம் மாணவர்கள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்த முடியும். இல்லாவிட்டால் அவர்கள் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளுக்காகக் குறைந்தது 4 மாதங்களாவது காத்திருக்க வேண்டும் என சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.