கோலாலம்பூர், 27 நவம்பர் 2026 : கெரிஞ்சி ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தண்டவாளத்தில் விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் லாலுவான் கெலானா ஜெயா ரயில் சேவையில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக Rapid KL தெரிவித்துள்ளது.
இன்று மாலை சுமார் 4.40 மணியளவில் பயணி ஒருவர் தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் நிகழ்ந்ததாக Rapid KL வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, Platform Intrusion Emergency Stop (PIES) பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டு, சம்பவ இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்ட பயணிக்கு ரயில் நிலைய பணியாளர்கள் உதவி வழங்கி, மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளால் ரயில் சேவையில் தற்காலிக தாமதம் ஏற்பட்டது.
மீட்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து லாலுவான் கெலானா ஜெயா ரயில் சேவை மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளதாக Rapid KL தெரிவித்துள்ளது.
உடல்நலக் குறைவு அல்லது உதவி தேவைப்படும் பயணிகள் ரயில் நிலையம் அல்லது நடைமேடையில் உள்ள பணியாளர்களை அணுகி உதவி பெறுமாறும், ரயில் வருகைக்காக காத்திருக்கும்போது மஞ்சள் பாதுகாப்புக் கோட்டிற்குப் பின்னால் நிற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







