புத்ராஜெயா, 27 நவம்பர் 2026 : மலேசியாவை 2030ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (AI) நாடாக உருவாக்கும் இலக்கை விரைவுபடுத்தும் வகையில், டிஜிட்டல் அமைச்சகம் மற்றும் அதன் முக்கிய நிறுவனங்களின் தலைமைத்துவக் குழுவில் புதிய நியமனங்களை மேற்கொண்டு தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த உலகப் பொருளாதாரத்தில் மலேசியாவின் போட்டித்திறனை உறுதிப்படுத்த, வலுவான கொள்கை உருவாக்கத்துடன் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் விரைவான, பயனுள்ள செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார். புதிய நியமனங்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலை வலுப்படுத்த உதவும் என்றும் தெரிவித்தார்.
டிஜிட்டல் அமைச்சகத்தின் துணைத் தலைமைச் செயலாளர் (டிஜிட்டல் மேம்பாடு) பொறுப்புக்கு டத்தோ டாக்டர் அப்துல் கபார் அபு பக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் (MDEC) தலைமைச் செயல் அதிகாரியாக அட்ரியன் மார்செல்லஸ், AI Malaysia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அர்சுமி முகமது யூசோப், தேசிய டிஜிட்டல் துறையின் (JDN) தலைமை இயக்குநராக நூர்ஜான் முகமது முஸ்தபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், MyDIGITAL Corporation நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக எல்லினா ரோஸ்லான் தொடர்ந்து பணியாற்றுவார். டிஜிட்டல் அமைச்சகத்தின் நிறுவனத் தொடர்புப் பிரிவு தலைவராக நூர் அனெய்தா அப்துல்லா பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2030ஆம் ஆண்டுக்கான AI நாடு என்ற இலக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாது; நாட்டின் சொந்த தொழில்நுட்பத் திறன்களை உருவாக்குதல், தரவுப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துதல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல், எதிர்காலத் தேவைகளுக்கேற்ற பணியாளர்களை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியின் பயன்களை அனைத்து மக்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும் என கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், அவர்களின் தலைமைத்துவம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு மூலம் டிஜிட்டல் அமைச்சகமும் அதன் நிறுவனங்களும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி, டிஜிட்டல் வளர்ச்சியில் மலேசியாவின் நிலையை மேலும் உயர்த்தும் என நம்பிக்கை தெரிவித்தார். அதேவேளையில், முந்தைய தலைமைத்துவத்தினர் வழங்கிய சேவைகளுக்கும் அடித்தளப் பங்களிப்புகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.







