என் தமிழ்

தமிழ்ப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதி மித்ராவின் கல்வி ஒதுக்கீட்டில் இல்லை : குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம்

புத்ராஜெயா, 27 நவம்பர் 2026 : தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானம், பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கல்வி நிதி கல்வி அமைச்சிடம் வழங்கப்படுவதாக ம.இ.கா. தலைவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மித்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், மித்ராவின் நிதி ஒதுக்கீட்டின் நோக்கம் மற்றும் பயன்பாட்டைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் தெரிவித்துள்ள மித்ரா, அதன் கல்வி நிதி பள்ளிகளின் கட்டுமானம் அல்லது உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அல்லாமல், இந்தியச் சமூகத்தினருக்கு நேரடியாகப் பயனளிக்கும் கல்வித் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளது.

தேசிய கல்வி அறக்கட்டளை (YDN) மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து, இந்தியச் சமூகத்தின் மனிதவள மேம்பாட்டை இலக்காகக் கொண்டு பல்வேறு கல்வித் திட்டங்களை மித்ரா முன்னெடுத்து வருகிறது. அவற்றில் 3,853 குழந்தைகள் பங்கேற்கும் செலிக் மடானி திட்டம், 10,395 குழந்தைகளுக்கு மலாய் மொழி, ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் கூடுதல் பயிற்சியுடன் மதிய உணவு வழங்கும் கல்வி மடானி திட்டம், 361 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 14 வகையான தளவாடப் பொருள்கள் வழங்கும் திட்டம் மற்றும் 388 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 திறன்மிகு மின்னணுப் பலகைகள் வழங்கும் திட்டம் ஆகியவை அடங்கும்.

மேலும், எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கான தமிழ்மொழி கருத்தரங்குகள், கூடுதல் பயிற்சி வகுப்புகள், 5,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பெராந்தி மடானி திட்டம் மற்றும் முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் 5,000 பேருக்கு தலா 2,000 ரிங்கிட் வழங்கும் சிஸ்வா மடானி சிறப்பு உதவித் திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

மித்ராவின் கல்வி ஒதுக்கீட்டை தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியாகச் சித்தரிப்பது தவறான தகவல்களைப் பரப்புவதற்கு சமம் என்றும், திட்டங்களின் வரம்பு மற்றும் செயல்பாட்டு விவரங்களை ஆராயாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பொறுப்பற்ற செயலாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மித்ரா தொடர்பான விமர்சனங்கள் உண்மைகள், ஆதாரங்கள் மற்றும் திட்டங்களின் செயல்பாட்டு வரம்புகளைப் புரிந்துகொண்ட அடிப்படையில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும், ஊகங்கள் அல்லது தவறான விளக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Scroll to Top