குச்சிங், 27 நவம்பர் 2026 : இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட நாட்டுப்புறக் கலைக் குழு, நவம்பர் 16 முதல் 19ஆம் தேதி வரை சரவாக், குச்சிங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இந்தியாவின் பாரம்பரியக் கலை மற்றும் கலாசாரத்தைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
ரேஷ்மா சாயா முசாலே தலைமையில் வந்த இக்குழுவினர், நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் மூலம் மகாராஷ்டிராவின் கலாசாரச் செழுமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். இந்தியத் தூதரகம், கோலாலம்பூர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாசார மையம் (NSCBICC) ஆகியவை சரவாக் இந்திய பெண்கள் சங்கத்துடன் (SIWA) இணைந்து, தெற்காசிய சர்வதேச மகளிர் மாநாட்டை முன்னிட்டு இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.


குச்சிங்கில் நடைபெற்ற தெற்காசிய சர்வதேச மகளிர் மாநாடு, அதன் நிறைவு நிகழ்ச்சி, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சரவாக் வளாகம் மற்றும் ரிவர்சைட் மெஜஸ்டிக் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளக்க நிகழ்ச்சி, மாணவர்களுக்கு மகாராஷ்டிர நாட்டுப்புற நடன மரபுகள் மற்றும் அவற்றின் கலாசார முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள வாய்ப்பளித்தது.
இந்தப் பயணம் இந்தியா–மலேசிய மக்களிடையேயான உறவையும் கலாசாரப் புரிதலையும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. சரவாக் மாநிலத்தில் இந்தியக் கலைக் குழு ஒன்று நிகழ்ச்சி நடத்தியது இதுவே முதல்முறை என்பதால், இரு தரப்பினரின் கலாசார உறவில் இது குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. நிகழ்ச்சிகளுக்கு சரவாக் மக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்தது.









