என் தமிழ்

பிரிமாஸ்(PRIMAS) தேர்தலில் டாக்டர் சீனு தலைமையிலான அணி வெற்றி – உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உறுதி

கோலாலம்பூர், 25 நவம்பர் 2026 : மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான (PRIMAS) தேர்தலில் டாக்டர் சீனு தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தை (AGM) தொடர்ந்து, நவம்பர் 25ஆம் தேதி சுபாங் டோர்செட் கிராண்ட் தங்கும் விசுதியில் (Dorsett Grand Subang) நடைபெற்ற தேர்தலில் இந்த அணி வெற்றி பெற்றது.

தேர்தலில் தலைவராக டாக்டர் சின்னையா அழகன் என்கின்ற டாக்டர் சீனு தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக என். சண்முகம், உதவித் தலைவராக மகாலிங்கம் கருப்பையா, செயலாளராக தயாளன் பாலகிருஷ்ணன் மற்றும் பொருளாளராக பூபாலன் துரைசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த டாக்டர் சீனு, தேர்தல் பிரசாரத்தின்போது உறுப்பினர்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார். PRIMAS உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுப்பினர்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதாக அவர் உறுதியளித்தார்.

குறிப்பாக, இந்திய உணவகத் துறையில் நிலவி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் உதவியையும் ஆதரவையும் நாடுவதாக டாக்டர் சீனு வேண்டுகோள் விடுத்தார். PRIMAS உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் வெளிநாட்டுத் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண அமைச்சரின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், சங்கத்தின் முன்னாள் நிர்வாகக் குழுவினர் வழங்கும் ஆலோசனைகளையும் அனுபவங்களையும் மதித்து, அவர்களின் வழிகாட்டுதல்களைப் பெற்றுச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சங்கத்தின் நலன் மற்றும் உறுப்பினர்களின் நன்மைக்காக அனைவரையும் ஒன்றிணைத்து, எந்தவித பாகுபாடுமின்றி கூட்டாக செயல்படுவதே தமது அணுகுமுறை என்றும் அவர் வலியுறுத்தினார்.

PRIMAS சங்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி, உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை முன்வைத்து, அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகமாக புதிய குழு செயல்படும் என்ற எதிர்பார்ப்பு உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது.

Scroll to Top