கோலாலம்பூர், 25 நவம்பர் 2026 : மலேசியாவில் இந்திய உணவகத் துறை எதிர்கொண்டு வரும் அந்நியத் தொழிலாளர் பிரச்சினை எதிர்வரும் காலங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என்பதால், உணவக உரிமையாளர்கள் தற்போதே மாற்று நடவடிக்கைகளுக்குத் தயாராக வேண்டும் என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் (PRIMAS) கௌரவத் தலைவர் டத்தோ ரெனா இராமலிங்கம் வலியுறுத்தினார்.
குறிப்பாக, இந்திய உணவகங்கள் பாரம்பரிய சேவை முறைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், சுயசேவை (Self-Service) முறையையும் அறிமுகப்படுத்தி, நவீன உணவகச் செயல்பாட்டு முறைகளுக்கு மாற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
PRIMAS சங்கத்தின் 26ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று சுபாங் டோசர்ஸ் விடுதியில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து உணவக உரிமையாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய டத்தோ ரெனா இராமலிங்கம், உணவகத் துறையில் அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் நிலை நீண்டகாலமாகத் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் தொடர்பாக உணவக உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியானபோது, PRIMAS பல்வேறு முயற்சிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்து அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவியதாக அவர் நினைவுகூர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து அந்நியத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இன்றளவும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதைக் கருத்தில் கொண்டு, உணவக உரிமையாளர்கள் தங்களது செயல்பாட்டு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றார்.
அதேவேளையில், உள்ளூர் தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், சுயசேவை முறையைப் படிப்படியாக அறிமுகப்படுத்துவது இந்திய உணவகங்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் துணைபுரியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்திய உணவக உரிமையாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதில் PRIMAS தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து இந்திய உணவக உரிமையாளர்களும் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்திட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
“நமது எண்ணிக்கைதான் நமது பலம். உணவக உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் துறையின் பிரச்சினைகளுக்கு வலுவான தீர்வுகளை முன்வைக்க முடியும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் PRIMAS சங்கத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், தலைவர் டத்தோ சுரேஸ் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







