கொஞ்சம்கூட யோசிக்காமல் கொஞ்சம் கூட இன்றைய அறிவியல் தொழில்நுட்ப அறிவு இல்லாமல், ஒரு விஷயத்தை எப்படி கையாள்வது எனும் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசுவது எப்படி என்று கே.பி.சாமியிடம் கற்றுக்கொள்ளலாம்
கே.பி.சாமி எனும் பெயரில் ஒரு போலி முகநூல் பக்கம் தான் வெளியிடாத(உண்மையா என்பது தெரியவில்லை) கருத்துக்களை வெளியிட்டு வருவதுதான் கே.பி.சாமியின் பிரச்சனை. அதை அவர் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்திடமும் காவல் துறையினரிடமும் முறையிட்டது வரை சரி. இப்பொழுது எதற்கு தேவையே இல்லாமல் இந்த பிரச்சனையில் ம.இ.கா இளைஞர் பிரிவினரை சம்பந்தப்படுத்துகிறார் என்று தெரியவில்லை. மத்தியச் செயலவையில் உறுப்பினராக இருப்பதால் யாரையும் தருந்த ஆதாரம் இன்றி கைகாட்ட வேண்டாம் என்று நான் அவரை எச்சரிக்கிறேன்.
நாங்கள் இளைஞர் பிரிவில் இந்திய இளைஞர் சமுதாயத்தை முன்னேற்றும் வழிவகைகளை அலசி ஆராய்ந்து அல்லும் பகலும் உழைத்து கொண்டிருக்கிறோம். அதற்கு தினம் வரும் பத்திரிக்கை செய்திகளே சாட்சி. ஆனால் என்னவோ ம.இ.கா இளைஞர் பிரிவுக்கு வேறு வேலையே இல்லாதது போலவும், கே.பி.சாமி பெரிய சமுதாய புள்ளி என்பது போலவும் நாங்கள் அவர் நற்பெயரை(சந்தேகம்) சீர்குலைத்து இம்மாதியான சதிநாச வேலைகளை செய்வதுப்போலவும் கே.பி.சாமி பேசுகிறார். தெரியாமல் கேட்கிறேன் நீங்கள் பயன்படுத்துவதில் எது உங்களது அதிகாரபூர்வ முகநூல் பக்கம், எது இல்லை என்று ஆராய்வதுதான் எங்களது வேலையா? உங்களது பெயர், உங்களது படம் அந்த முகநூல் பக்கத்தில் உள்ளது வேறு என்ன வேண்டும்? அல்லது அது ஒரு போலியான பக்கம் என்று இதுநாள் வரையில் உங்களது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு விளக்கச் செய்து போட்டுள்ளீர்களா? இல்லையே. அப்படி செய்திருந்தால் இவ்விவகாரம் இந்த அளவிற்கு வந்திருக்காதே? குறை அனைத்தையும் உங்களிடத்தில் வைத்துக்கொண்டு எங்களை ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள்?
கே.பி.சாமி அவர்களே, எங்களது தலைவர் ச.சிவராஜ் அவர்களும் எங்களாலும் உங்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது. அதே 72 மணி நேரம் உங்களுக்கு நாங்கள் கொடுக்கிறோம். நீங்கள் உங்கள் அறிக்கையில் சொன்னதுபோல் யார் அந்த போலி முகநூல் பக்கத்தை வழிநடத்துவது என்று சொல்லுங்கள். சொல்ல தவறினால் நீங்கள் பாவம் கட்சியின் வழக்கறிஞர்களை நம்பாமல் வெளியில் உள்ளவரின் உதவி நாடி சென்றுள்ளீர்கள்(விவரம் தெரிந்தவர்கள் யாரும் உதவ மாட்டார்கள் அது வேறு கதை), எங்களுக்கு சட்டரீதியாக வழிநடத்திச் செல்ல எங்களது வழக்கறிஞர், இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் திரு. தினாளன் ராஜகோபாலு இருக்கிறார். அவரது ஆலோசனைப்படி அடுத்த நடவடிக்கை நாங்கள் எடுக்க தயங்க மாட்டோம். அதே வேளையில் இவ்விவகாரத்தை மத்தியச் செயலவைக் கூட்டத்திலும் நாங்கள் விவாதித்து உங்களின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சொவோம். இவ்விடத்தில் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒன்று உருப்படியாக சமுதாயத்திற்கு வேலை செய்யுங்கள் இல்லையென்றால் வேலை செய்யும் எங்களை போன்றோரை இப்படி வீம்வம்புக்கு இழுக்காதீர்கள். எச்சரிக்கிறேன்.
இவ்வாறு தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் செயலாளர் இன்று 26/09/2014 வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.