செகாமாட், 19 நவம்பர் 2026 : பத்து அனாம் தேசியப் பள்ளியில் 2026ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வின் சிறந்த மாணவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பாக் மாலாவிலுள்ள அப்பள்ளியின் அஸ்-ஷாஃபி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒற்றுமை துணை அமைச்சருமான யுனேஸ்வரன் ராமராஜைப் பிரதிநிதித்து அவரது சிறப்பு அதிகாரி செட்டி ஹலினா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் கல்வி, பாடத்திட்டம் மற்றும் இணைப் பாடத்திட்டச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, 6 காமா வகுப்பைச் சேர்ந்த நூர் ஹுஸ்னா பிந்தி முகமது சைனுடின், 2026ஆம் ஆண்டின் சிறந்த மாணவர் ஆளுமையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த பள்ளித் தலைமை ஆசிரியர் சுரைஷாஸ்மான் இஸ்மாயில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சையத் அசார், ஆசிரியர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு யுனேஸ்வரன் ராமராஜ் பாராட்டுத் தெரிவித்தார். மாணவர்களின் இந்தச் சாதனைகள் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெறுவதற்கு ஊக்கமாக அமையட்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.










